கடதறவென்னு நான்கு மெய்மை ஊர்ந்து வருங் குற்றியலுகரத்தை ஈறாகவுடைய சொல்லு , என் ஏன் அல்லென்னு மீற்றவாகிய சொல்லுமென அவ்வேழும், ஒருமை யுணர்த்துந் தன்மைச் சொல்லாம் ; எ - று. குற்றுகரநான்கும், அல்லும் , எதிர்காலம்பற்றி வரும். குற்றுகரம், காலவெழுத்துப் பெறுங்கால், உம்மீற்றோ டொக்கும் . அல்லீறு பகரமும் வகரமும் பெற்று வரும். என் ஏன் என்பன மூன்று காலமும் பற்றி வரும். எ - டு :உண்கு உண்டு ; வருது , சேறு எனவும் உரிஞுகு திருமுகு எனவும் ; உண்டனென் உண்ணாநின்றனென், உண்குவென் எனவும் ; உண்டேன் , உண்ணாநின்றேன், உண்பேன் எனவும் ; உண்பல் வருவல் எனவும் வரும். காலவெழுத் தடுத்தற்கண் எம்மீற்றோடு என்னீறும் ஏமீற்றோடு ஏனீறுமொக்கும் . ஆண்டுக் கூறிய விகற்பமெல்லாம் அறிந்தொட்டிக் கொள்க. குற்றியலுகரமென ஒன்றாகாது நான்காதற்கு முன்னுரைத்தாங் குரைக்க. எதிர்காலம்பற்றி வழக்குப் பயிற்சியுமில்லாக் குற்று கரத்தை, அங்ஙனம் வரும் அல்லோடு பின் வையாது மூன்று காலமும் பற்றிப் பயின்று வரும் என் ஏன் என்பனவற்றின் முன் உம்மீற்றோடியைய வைத்தது, செய்கென்பது போலச் செய்குமென்பதூஉங் காண்கும் வந்தேம் , என வினைகொண்டு முடியுமென்ப தறிவித்தற்கெனக்கொள்க. (6) |