மேற்கூறப்பட்ட ஒருமைத் தன்மை வினை ஏழனுள், செய்கென்னுஞ் சொல் வினையொடு முடியுமாயினும் , முற்றுச் சொல்லாதலிற் றிரியாது ; எ - று. எ - டு :காண்கு வந்தேன் என வரும். செய்கென்கிளவி அவ்வியல் திரியாதெனவே , `பெயர்த்தனென் முயங்கயான்' (குறுந் . 84 ) எனவும், `தங்கினை சென்மோ' (புறம் - 320 ) எனவும் , `மோயின ளுயிர்த்த காலை' (அகம் - 5) எனவும் ஏனைமுற்றுச் சொல் வினை கொள்ளுங்கால் அவ்வியல் திரியு மென்பதாம் . அவை திரிந்தவழி வினையெச்சமாதல் `வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய' (சொல் - 457 ) என்புழிப் பெறப்படும். இருசாரனவும் பெயர் கொள்ளாது வினை கொண்ட வழிச் செய்கென் கிளவி திரியாதென்றும் ஏனைய திரியுமென்றுங் கூறிய கருத் தென்னை யெனின் : - நன்று சொன்னாய் ; காண்கு வந்தேன் என்றவழிச் செய்கென் கிளவி வினையெச்சமாய்த் திரிந்ததாயிற் செய்தெனெச்சமாதற் கேலாமையின், செயவெனெச்சமாய்த் திரிந்ததெனல் வேண்டும். வேண்டவே செயவெனெச்சத்திற்குரிய வினைமுதல் வினையும் பிறவினையும் அதுகொள்வான் செல்லும் ; வினைமுதல் வினையல்லது கொள்ளாமையிற் செயவெனெச்சமாய்த் திரிந்த தென்றல் பொருந்தாது . பிறிதாறின்மையின் , முற்றுச் சொல்லாய் நின்ற தெனவே படும் . அதனான் அவ்வியல் திரியாதென்றா ரென்பது. அல்லதூஉம் செய்கென் கிளவி சிறுபான்மை யல்லது பெயர் கொள்ளாமையின் ; பெரும் பான்மையாகிய வினைகோடல் அதற்கியல்பேயாம் ; ஆகவே அது திரிந்து வினைகொள்ளு மெனல் வேண்டாவாம் ; அதனாலும் முற்றாய் நின்று வினை கொண்ட தென்றலே முறைமையென் றுணர்க. `முற்றுச் சொற்கும் வினையொடு முடியினும் முற்றுச்சொ லென்னும் முறைமையி னிறவா' என்றார் பிறருமெனக் கொள்க.`பெயர்த்தனென் முயங்க' (குறுந் - 84) என்னுந் தொடக்கத்தன இறந்தகாலமுணர்த்தலிற் செய்தெனெச்சமாதற் கேற்புடைமையான் , அவற்றைத் திரிபென்றார். முன்னர் `எத்திறத் தானும் பெயர்முடி பினவே' என்பதனாற் பெயரொடு முடிதலெய்துவதனை விலக்கியவாறு. (7) |