6.வினையியல்

உயர்திணை வினை

படர்க்கை யொருமை வினைமுற்று

205அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.
 

தன்மைவினை யுணர்த்தி, இனி யுயர்திணைப் படர்க்கை வினை யுணர்த்துகின்றார்.

அன், ஆன், அள், ஆள் என்னு மீற்றையுடைய நான்கு சொல்லும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் ; எ - று.

இவை நான்கீறும் மூன்று காலமும்பற்றி வரும்.

எ - டு :உண்டனன் , உண்ணாநின்றனன் , உண்பன் எனவும் ; உண்டான் உண்ணாநின்றான், உண்பான் எனவும் ; உண்டனள், உண்ணா நின்றனள், உண்பள் எனவும் ; உண்டாள் உண்ணாநின்றாள் , உண்பாள் எனவும் வரும்.

காலத்துக் கேற்ற எழுத்துப்பெறுங்கால் அன்னும் அள்ளும் அம் மீற்றோடும் ஆனும் ஆளும் ஆமீற்றோடு மொக்கும் . அவ் வேறுபாடெல்லாமறிந்தொட்டிக் கொள்க.

(8)