6.வினையியல்

உயர்திணை வினை

செய்மார் என்னும் வாய்பாட்டு வினை

207மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப.
 

முன்னையனவேயன்றி மாரீற்றுச் சொல்லும் பல்லோர் படர்க்கையை யுணர்த்தும் ; அஃது அவைபோலப் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியும் ;எ - று.

பகரத்திற்குரிய காலவெழுத்து மாரைக் கிளவிக்கு மொக்கும்.

எள்ளுமார் வந்தார் . கொண்மார் வந்தார் என வரும் . குகரம் வந்தவழிக் கண்டுகொள்க.

எ - டு :மாரைக்கிளவி வினையோடல்லது பெயரொடு முடியாமையின் . எச்சமாய்த் திரிந்து வினைகொண்ட தெனப் படாமையறிக, அஃதேல் .

`பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே' (புறம் - 375)


எனவும்,

`காமம் படரட வருந்திய
நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே' ; (நற் - 64)

எனவும், மாரீற்றுச்சொற் பெயர்கொண்டு வந்தனவா லெனின் : -அவை பாடுவார் காண்பார் என்னும் ஆரீற்று முற்றிச் சொல்லின் எதிர் மறையாய் ஒரு மொழிப்புணர்ச்சியான் மகரம் பெற்று நின்றன. மாரீறாயின் , அவை பாடாதொழிவார். காணாதொழிவார் என ஏவற்பொருண்மை யுணர்த்து மாறில்லையென்க.

(10)