பன்மையும் ஒருமையுமாகிய பாலுணரவந்த இருபத்து மூன்றீற்று வினைச்சொல்லும் முன்னுறக் கிளக்கப்பட்ட உயர்திணையுடையன ; எ - று. ஈண்டுக் கூறிய படர்க்கைவினையே கிளவியாக்கத்துக்கட் கூறப்பட்டன . அவை வேறல்லவென்பார் , முன்னுறக் கிளந்தவென்றார் . அதனாற் பயன் அன் ஆன் அள் ஆளென் பன ஆண்பால் பெண்பாலுணர்த்துதல் ஈண்டுப் பெறுதலும் , னஃகானொற்று முதலாயின படர்க்கைவினைக் கீறாய்நின்று பாலுணர்த்துதல் ஆண்டுப் பெறுதலுமாம் . அஃதேல் , முற்றுப் பெற ஓரிடத்துக் கூறவமையும் ஈரிடத்துக் கூறிப் பயந்த தென்னையெனின் : - பாலுணர்த்தும் இடைசொற்பற்றி உயர்திணைப் படர்க்கைவினை யுணர்த்துதல் ஈண்டுக் கூறியதனாற் பயன் வழுக்காத்தற்கு இவற்றைத் தொகுத்திலக்கண வழக்குணர்த்துதலா மென்க . பெயரியல் நோக்கிப் `பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்' என்றாற்போல வினையியல் நோக்கி `வினையிற்றோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா' என வமையும் ஆண்டுக் கூறல்வேண்டாவெனின் : - அற்றன்று ; இருதிணை யைம்பாற் சொலுணர்த்தாக்கால் திணைபால்பற்றி வழுவற்கவெனவும் வழீஇயமைக வெனவும் வழுக்காத்த சூத்திரங்களெல்லாவற்றானும் பொருளினிது விளங்காமையானும் வினையுள்ளுந் திரிபின்றிப் பால் விளக்குதற் சிறப்புடையன படர்க்கைவினையே யாகலானும்,அவற்றைப் பிரித்து ஆண்டுக் கூறினாரென்பது . படர்க்கைப் பெயரீறுந் திரிபின்றிப் பாலுணர்த்தாமையின் , இலக்கணவெழுத்தோடு கூறாது , எதிரது நோக்கிக்கொள்ள வைத்தாரென்க. மூன்றுதலை யிட்ட வந்நாலைந்துமாவன இவை யென இனிது விளங்கப் `பன்மையு மொருமையும் பாலறி வந்த' என்றார். இதனாற் பயன் , உயர்திணைவினை மூன்றுதலையிட்ட நாலைந்தென்னும் வரையறை. (11) |