கூறப்பட்ட இருபத்துமூன்று சொற்களுள். பன்மை யுணர்த்துந் தன்மைச்சொல் எண்ணியலும் வழி அஃறிணையை யுளப்படுத்துத் திரிவனவுள; எ - று. எ - டு :`யானுமென் எஃகமுஞ் சாறும்' என வரும். தன்மைப்பன்மை வினைச்சொல் , உயர்திணை வினையாகலின் , உயர்திணையே உளப்படுத்தற்பாலன , அஃறிணையை உளப்படுத்தல் வழுவாயினும் அமைக வென்பார் , திரிபவை யுளவென்றார் . அதனான் இச்சூத்திரத்தை `முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே' (சொல் - 208) என்னும் சூத்திரத்தின் பின் வைத்தார். திரியுமென்னாது திரிபவையுளவென் றதனான் , எல்லாத் திரியாசிலவே திரிவன வென்பதாம் . (12) |