1.கிளவியாக்கம்

2.பால்

இயல்புவழக்கும் தகுதிவழக்கும் அமையும் வகை.

21ஆக்கந் தானே காரண முதற்றே.
 

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறுங்கால், காரணத்தை முற்கூறி அதன் வழி ஆக்கங் கூறுக; எ-று.

தானே என்பது செய்யுட்சுவை குறித்து நின்றது.

எ - டு: கடுக்கலந்த கைபிழியெண்ணெய் பெற்றமையான் மயிர் நல்லவாயின; எருப் பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையால் பைங்கூழ் நல்லவாயின; நீர் கலத்தலால் நிலம் மெலிதாயிற்று; தீச் சார்தலால் நீர் வெய்தாயிற்று என வரும்.

மயிர் நல்ல, பயிர் நல்ல எனச் செயற்கைப்பொருள் ஆக்கம் பெறாது வந்தனவாலெனின்:- அந் நன்மை பொருட்குப் பின் தோன்றாது உடன் தோன்றிற்றேல் இயற்கையேயாம்; அவ்வாறன்றி, முன் தீயவாய்ப் பின் நல்ல வாயின வேனும், தீய நிலைமை காணாதான் மயிர் நல்ல பயிர் நல்ல என்றால் படும் இழுக்கென்னை? அது செயற்கையாவது உணர்ந்தான் ஆக்கங்கொடாது சொல்லினன்றே வழுவாதென்க.

செயற்கைப் பொருளை ஆக்கமுங் காரணமுங் கொடுத்துச் சொல்லுக என்பதே கருத்தாயின் சூத்திரம் ஒன்றாகற் பாற்றெனின்:- அவ்வாறோதின், ஆக்கமுங் காரணமுஞ் செயற்கைப் பொருட்கண் ஒத்தவாயின என்பது பட்டுக்1 `காரணமின்றியும் போக்கின்று' (சொல்-22) என்பதனோடு மாறுகோடலானும், காரணஞ் செயற்கைப் பொருள்தேர் ஆக்கத்ததோ என ஐயுறப்படுதலானும், ஆக்கந்தானே காரண முதற்றெனப் பிரித்துக் கூறினாரென்பது.

இயற்கைப்பொருள் ஆக்கமுங் காரணமும் பெறாது வருதலும் செயற்கைப் பொருள் அவைபெற்று வருதலும் இலக்கண மெனவே, இவ்வாறன்றி வருவன மரபு வழு என்பதாம்.

நுண்ணுணர்வுடையார்க்குத் `தம்மர பினவே' (சொல்-11) என அடங்குவ வாயினும், ஏனையுணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணர லாகாமையின் விரித்துக் கூறினார்.

(21)

1. "ஆக்கமுங்...பட்டு" - செயற்கைப் பொருட்கு ஆக்கம் போன்றே காரணமும் யாப்புறவாய் (நியதியாய்) வரவேண்டுமென்று பொருள் பட்டு.