யாரென்னும் வினாப்பொருளை யுணர்த்துஞ் சொல் உயர்திணை மருங்கின் முப்பாற்கு முரித்து; எ - று. எ - டு :அவன் யார் , அவள் யார் , அவர் யார் என வரும் . எ - டு :`ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்தெங் கோதைகூட் டுண்ணிய தான்யார்மன் - போதெல்லாந் தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன் தூதொடு வாராத வண்டு' என்புழி , வண்டுதான் யார் என , யாரென்பது அஃறிணைக் கண்ணும் வந்ததாலெனின் :- அது திணைவழுவமைதி யெனப் படும். இது வினைக்குறிப்பாயினும் , பல்லோர் படர்க்கை யுணர்த்தும் ஆரீற்றின் மூன்றுபா லுணர்த்தும் வேறுபாடுடை மையின் , அவற்றொடு வையாது ஈண்டு வைத்தார் . செய்யு ளின்பநோக்கி அளபெழுந்து நின்றது. வினாவின் கிளவியென அதன்பொரு ளுணர்த்தியவாறு. (13) |