6.வினையியல்

உயர்திணை வினை

வினைமுற்றுக்களின் ஈறுகளிற் சில திரியுமாறு

211பாலறி மரபின் அம்மூ ஈற்றும்
ஆஓ ஆகுஞ் செய்ய ளுள்ளே.
 

பால் விளங்க வருமியல்பையுடைய அம்மூன் றீற்றின் கண்ணும் ஆகாரம் ஓகாரமாகுஞ் செய்யுளிடத்து; எ - று.

பாலறிமரபினென்றதனால் பாலுணர்த்துதற்கண் திரிபுடை ஆமீறு விலக்குண்ணும் மார் சிறுவழக்கிற் றாகலானும் மாகாரம் ஓகாரமா தற்கேலாமையானும் , அம்மூவீறாவன ஆன் ஆள் ஆர் என்பனவேயாம்.

எ - டு :`வினவிநிற்றந் தோனே' (அகம் - 48), `நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே' (அகம் - 248),` பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே' (குறந் - 216), என ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தவாறு கண்டு கொள்க.

வந்தோம், சென்றோம் என வழக்கினுள் வருவனவோ வெனின்;-அவை ஏமீற்றின் சிதைவென மறுக்க.

(14)