ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட்கண்ணும் , ஏழாம் வேற்றுமையது நிலப்பொருட்கண்ணும் , ஒப்பின்கண்ணும் , பண்பின் கண்ணுமென அப் பகுதிக்காலங் குறிப்பாற் றோன்றும் ; எ - று. அப்பகுதிக்காலமாவது அப்பொருட்பகுதிபற்றி வருஞ் சொல்லகத்துக் காலமாம். அப் பகுதிக்காலங் குறிப்பாற் றோன்றுமெனவே , அப்பொருள் பற்றி வினைக்குறிப்பு வருமென்றவாறாம். உடையானது உடைமைத்தன்மையேயன்றி உடைப்பொருளும் உடைமையெனப்படுதலின் உடைமையானு மென்பதற்கு உடைப்பொருட் கண்ணுமெனவு முரைக்க . உரைக்கவே , உடைப்பொருட்கண் வருங்கால் , உடைப்பொருட் சொல்லாகிய முதனிலைபற்றி வருதலும் பெறப்படும் கருமை யனென்பது உடைமைப் பொருளாயடங்கலின் . பண்பினானும் என்புழிக் கரியனென இன்ன னென்பதுபட வருதலே கொள்க. வாளாது உடைமையானும் என்றவழி `அன்மையின்' (சொல் - 214) என்பதுபோல அவ்வொரு வாய்பாடேபற்றி நிற்கும். இதனை இஃதுடைத் தென்பதுபட வரும் எல்லா வாய்பாடுந் தழுவுதற்கு `அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானு' மென்றார் . `கண்ணென் வேற்றுமை நிலத்தி னானு' மென்பதற்கும் ஈதொக்கும். ஆயின் இஃதிரண்டாம் வேற்றுமைப் பொருளா மெனின் :- ஆண்டுடைமை உருபு நோக்கிய சொல்லாய் வருவதல்லது இரண்டாம் வேற்றுமைப் பொருளெனப் படாது. என்னை? அது செயப்படு பொருண்மைத்தாகலின் , அதனான் உடைமை ஆறாவதன் பொருளெனவே படுமென்பது. எ - டு : `கச்சினன் கழலினன், எனவும்' இல்லத்தன் புறத்தன் எனவும் , பொன்னன்னன் புலிபோல்வன் எனவும் , கரியன் செய்யன் எனவும் வரும். கச்சினான் , இல்லத்தான் எனப் பெயருங் குறிப்பாற் காலம் விளக்கலின் அப்பாற் காலங்குறிப்பொடு தோன்று மென்றதனான் வினைக்குறிப்பென்பது பெறுமாறென்னை யெனின்:- `தொழினிலை யொட்டு மொன்றலங்கடை' (சொல் - 70) எனத் தொழிற்பெயரல்லன காலந்தோன்றா வென்றமையால் , கச்சினான் இல்லத்தானென்பன காலம் விளக்காமையின் குறிப்பாற் காலம் விளக்குவன வினைக் குறிப்பாதல் பெறுதும் . அல்லாதூஉம் , வினைக்குறிப்பும் காலந் தோன்றுதலை இலக்கணமாகவுடைய வினைச்சொல்லேயாதலின், தெற்றென விளக்காவாயினுங் காலமுடையவெனவேபடும். பெயர்க்கு அன்னதோ ரிலக்கணமின்மையின் , காலந்தெற்றென விளக்குவன வுளவேற் கொள்வதல்லது , காலம் விளக்காத பெயருங் காலமுடையவென உய்த்துணருமா றில்லை. அதனானுங் குறிப்பாற் காலமுணர்த்துவன வினைக்குறிப்பே யென்பது பெறப்படு மென்க. தன்னினமுடித்த லென்பதனான் , ஐயாட்டையன் , துணங்கையன் எனச் சிறுபான்மை காலமும் வினைசெய்யிடமும் பற்றி வருவனவுங் கொள்க. (16) |