6.வினையியல்

உயர்திணை வினை

குறிப்பு வினைமுற்றின் ஈறு

215பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
 

பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப் பொருண்மையுடையவாய் வரும் வினைச்சொல் , மேல் வரு முயர்திணைக்கட் கூறிய தெரிநிலை வினையோடொக்கும் ; எ - று.

தெரிநிலைவினையோ டொத்தலாவது , உயர்திணைத் தெரிநிலை வினைக்கோதிய ஈற்றுள் தமக்கேற்பனவற்றோடு வினைக்குறிப்பு வந்த வழி , அவ்வவ் வீற்றான் அவ்வப்பாலும் இடமும் விளக்கலான் .

மேல் வினைக்குறிப்பு இன்னபொருள்பற்றி வருமென்ற தல்லது இன்ன வீற்றான் இன்னபால் விளக்குமென்றிலர்; அதனான் அஃதீண்டுக் கூறினார்.

கூறப்பட்ட பொருட்கண் வந்தனவாயினும் இல்லை , இல் , இன்றி என்பன பால் விளக்காமையின் , அவற்றை நீக்குதற்குப் பன்மையு மொருமையும் பாலறி வந்த வென்றார்.

ஒரு பொருட்கட் பல வாய்பாடும் ஒரு பொருட்கண் ஒரு வாய்பாடும் பற்றி வரும் இருதிறமும் எஞ்சாமற் றழுவுதற்கு , அன்னமரபின் என்றார்.

தன்மையும் படர்க்கையும் உணர்த்துந் தெரிநிலைவினை யீற்றுட் குறிப்பு வினைக்கேற்பன :- அம் , ஆம் , எம் , ஏம் ,என் , ஏன் , என்னுந் தன்மையீறாறும் , அன் , ஆன் , அள் ,ஆள் , அர் , ஆர் என்னும் படர்க்கையீறாறும் எனப் பன்னிரண்டாம்.

எ - டு : கரியம் , கரியாம் , கரியெம் , கரியேம் , கரியென். கரியேன் எனவும் ; கரியன் , கரியான் , கரியள் , கரியாள் , கரியர் , கரியார் எனவும் அவ்வவ்வீறு அவ்வவ் விடமும் பாலும் விளக்கியவாறு கண்டுகொள்க , ஒழிந்தபொருட்கண்ணு மொட்டிக்கொள்க.

ஆன் , ஆள் , ஆர் என்பன நிலப்பொருண்மைக்கண் அல்லது பிற பொருட்கண் பயின்றுவாரா.

இன்னும் , மேலைக்கிளவியொடு வேறுபாடில வென்றதனான் , வந்தனன் எனத் தெரிநிலைவினை தொழின்மை மேற்படத் தொழிலுடைப் பொருள் கீழ்ப்பட முற்றாய் நின்றுணர்த்தியவாறு போல , உடையான் எனக் குறிப்புவினையும் உடைமை மேற்பட உடையான் , கீழ்ப்பட முற்றாய் நின்றுணர்த்துதலுங் கொள்க. வந்தான் , உடையான் எனப் பெயராயவழித் தொழிலுடைப் பொருளும் உடையானும் மேற்பட்டுத் தோன்றுமா றறிக. இஃது `அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே' (சொல் -221) என்பதற்கு மொக்கும்.

(18)