6.வினையியல்

அஃறிணை வினை

பன்மை வினைமுற்று

216அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை.
 

உயர்திணைவினை யுணர்த்தி , இனி யஃறிணைவினை யுணர்த்து கின்றார்.

அகரமும் ஆகாரமும் வகர வுயிர்மெய்யு மாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்றும் அஃறிணைப் பன்மைப் படர்க்கையாம்; எ - று.

அகரம் மூன்று காலமும்பற்றி வரும். ஆகாரம் எதிர்மறை வினையாய் மூன்று காலத்திற்கும் உரித்தாயினும் எதிர்காலத்துப் பயின்றுவரும். அகரம் , இறந்தகாலம்பற்றி வருங்கால் , கடதறவென்னு நான்கன்முன் , அன் பெற்றும் , பெறாதும் வரும் . ஏனை யெழுத்தின்முன் ரகார ழகார மொழித்து இன் பெற்று வரும் . யகரத்தின்முன் சிறு பான்மை இன்னேயன்றி அன்பெற்றும் பெறாதும் வரும் . நிகழ்காலத்தின்கண் நில் , கின்றென்பனவற்றோடு அன்பெற்றும் பெறாதும் வரும் ; எதிர்காலத்தின்கண் பகர வகரத்தோடு அன்பெற்றும் பெறாதும் வரும்.

எ - டு : தொக்கன, தொக்க , உண்டன, உண்ட , வந்தன, வந்த , சென்றன, சென்ற எனவும், அஞ்சின எனவும்; போயின, போயன, போய எனவும்; உண்ணா நின்றன உண்ணா நின்ற, உண்கின்றன, உண்கின்ற எனவும்; உண்பன, உண்ப, வருவன, வருவ எனவும் வரும், உரிஞுவன, உரிஞுவ என உகரத்தோடு ஏனையெழுத்துப்பேறும் ஏற்றவழிக் கொள்க.

வருவ, செல்வ என்னுந் தொடக்கத்தன அகரவீறாதலும் , வகர வீறாதலுமுடைய வென்பது கிளவியாக்கத்துட் கூறினாம்.

ஆகாரம் , காலவெழுத்துப் பெறாது , உண்ணா , தின்னா என வரும் . வகரம் , உண்குவ, தின்குவ , என வெதிர் காலத்திற் குரித்தாய்க் குகரமடுத்தும் , ஓடுவ , பாடுவ எனக் குகரமடாதும் வரும். உரிஞுவ , திருமுவ என உகரம் பெறுதலும் ஏற்றவழிக் கொள்க. ஒழிந்தவெழுத்தோடும் ஒட்டிக் கொள்க.

(19)