ஒன்றனை யுணர்த்தும் படர்க்கை வினையாவது தறட வென்பனவற்றை ஊர்ந்துநின்ற குற்றியலுகரத்தை ஈறாகவுடைய சொல்லாம் ; எ - று. தகரவுகரம் மூன்று காலத்திற்கு முரித்து. றகரவுகரம் இறந்த காலத்திற்குரித்து . டகரவுகரம் மூன்று காலத்திற்கு முரிய வினைக் குறிப்பிற்கல்லது வாராது. அஃதேல் , வினைக் குறிப்புக் கூறம்வழிக் கூறாது ஈண்டுக் கூறிய தென்னையெனின்:- `அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபாடிலவே' (சொல் - 231) என வினைக் குறிப்புப் பாலுணர்த்துமாறு தெரிநிலை வினையொடு மாட்டெறியப் படுமாகலின் , டகரமூர்ந்த குற்றியலுகரம் தெரிநிலை வினைக்கீறாகாமையின் . மாட்டேற்று வகையாற் பாலுணர்த்துதல் பெறப்படாதாம்; அதனான் ஈண்டு வைத்தார். தகரவுகரம், இறந்தகாலத்து வருங்கால் புக்கது, உண்டது, வந்தது, சென்றது, போயது, உரிஞியது எனக் கடதறவும் யகரமுமாகிய உயிர்மெய்ப்பின் வரும். போனது என னகர உயிர்மெய்ப்பின் வருவதோவெனின்:-அது சான்றோர் செய்யுளுள் வாராமையின், அது சிதைவெனப்படும். நிகழ்காலத்தின்கண், நடவாநின்றது, நடக்கின்றது, உண்ணாநின்றது, உண்கின்றது என, நில், கின்றென்பனவற்றோடு அகரம் பெற்று வரும். எதிர்காலத்தின்கண், உண்பது, செல்வது எனப் பகரவகரம் பெற்றுவரும். றகரவுகரம், புக்கன்று, உண்டன்று, வந்தன்று, சென்றன்று எனக் கடதற வென்பவற்றின்முன் அன்பெற்று வரும். கூயின்று, கூயிற்று, போயின்று, போயிற்று என ஏனையெழுத்தின் முன் இன் பெற்று வரும். ஆண்டு இன்னின்னகரந் திரிந்துந் திரியாதும் வருதல் கொள்க. வந்தின்றென்பதோவெனின்:- அஃது எதிர்மறுத்தலை யுணர்த்துதற்கு வந்த இல்லினது லகரம் னகரமாய்த் திரிந்த எதிர்மறை வினையென மறுக்க. அஃதெதிர்மறையாதல், வந்தில, வந்திலன், வந்திலள், வந்திலர் என வரும் ஏனைப்பாற் சொல்லானறிக. டகரவுகரம் குண்டுகட்டு, குறுந்தாட்டு, என வரும்.1 (20) 1. ஒன்றன்பால் விகுதி உண்மையில் `து' ஒன்றே. `று' `டு' என்பன அதன் புணர்ச்சித் திரிபே. புக்கு+அன்+து=புக்கன்று; பால்+து=பாற்று; குண்டு+கண்+து=குண்டுகட்டு. குறுந்தாள் + து= குறுந்தாட்டு, `து' விகுதி `அது' என்பதன் குறுக்கமாம். |