6.வினையியல்

அஃறிணை வினை

`எவன்' என்னும் குறிப்பு முற்று

219அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவனெவன் வினாவே.
 

எவனென்னும் வினாச்சொல் மேற்கூறப்பட்ட அஃறினை இரண்டுபாற்கும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர்;எ - று.

எ - டு : அஃதெவன், அவையெவன் என வரும்.

னகரவீறாய் இரண்டுபாற்கும் பொதுவாய் வருதலின், இதனை வேறு கூறினார்.அஃதேல் நுமக்கிவன் எவனாம் என வுயர்திணைக் கண்ணும் வருமாலெனின்:-ஆண்டு அது முறைபற்றி நிற்றலின், அஃறிணைக்கண் வந்ததெனவேபடுமென்பது; அஃதேல் நுமக்கிவனென்ன முறையனாம் என்பதல்லது என்ன முறையாம் என்பது பொருந்தாதெனின்:- என்ன முறை என்பது ஆண்டு முறைமேனில்லாது ஒற்றுமை நயத்தான் முறையுடையான் மேனிற்றலின், அமையுமென்க. எவனென்பதோர் பெயரும் உண்டு; அஃதிக் காலத்து என்னென்றும் என்னையென்றும் நிற்கும். ஈண்டுக் கூறப்பட்டது வினைக்குறிப்புமுற் றென்க.

(22)