இன்று இலவென்பன முதலாகிய பத்தும் வினைக்குறிப்புச் சொல்லாம்; எ - று. அவற்றுள், இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பன தம்மையுணர்த்தி நின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன. எ - டு : இன்று, இல, கோடுடைத்து, கோடுடைய, அதுவன்று, அவையல்ல, உள என வரும், ஈண்டும், கோடின்று, கோடில என உடைமைக்கு மறுதலையாய இன்மைபற்றி வருவனவுங் கொள்க. உடையவென்பது முதலாயவற்றைச் செய்யுளின்ப நோக்கி மயங்கக் கூறினார். அவ்வேழனையும் பொருள் பற்றியோதாராயினார்; கிளந்தோதியவழியுஞ் சூத்திரமுஞ் சுருங்குமாகலானென்பது. உளதென்பது பெருவழக்கிற் றன்மையின், உளவென்பதே கூறினார். அது தன்னின முடித்தலென்பதனாற் கொள்ளப்படும். பண்பு கொள்கிளவி- கரிது, கரிய; செய்யது, செய்ய என வரும். பண்பினாகிய சினை முதற்கிளவி- நெடுஞ்செவித்து, நெடுஞ்செவிய என வரும். பண்படுத்த சினைபற்றியல்லது அவ்வினைக்குறிப்பு நில்லாமையின், பண்பினாகியவெனப் பண்பை முதனிலையாகக் கூறினார். பெருந்தோளன் என உயர்திணைக்கண்ணும் பண்படுத்து வருதல் ஒன்றென முடித்தலென்பதனாற் கொள்க. வேற்றுமைப் பொருள்பற்றி வருங்கால், பிறிதின்கிழமையும் உறுப்பின்கிழமையல்லாத தற்கிழமையும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும் பற்றி அஃறிணைவினைக் குறிப்புப் பயின்று வாராமையின், சினைக்கிழமையே கூறினார். அப்பொருள்பற்றிப் பயிலாது வருவன உரையிற் கோடலென்பதனாற் கொள்ளப்படும். `சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்' என்பதனாற் கொள்ளினு மமையும். `அறிந்த மாக்கட்டாகுக தில்ல' (அகம்-15), `மெல்விரன் மந்திகுறைகூறுஞ் செம்மற்றே' (கலி-40) எனவும், `அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே' (புறம் 173) எனவும் வரும். `வடாது', `தெனாது'(புறம்-6) என்பனவும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மைக்கண் வந்த வினைக்குறிப்பு; பெயருமாம். ஒப்பொடு வரூஉங் கிளவி-பொன்னன்னது, பொன்னன்ன எனவரும். ஒப்பொடு வருதலாவது பொருள்பற்றி வருதல். வழக்குப்பயிற்சி நோக்கிப் பத்தென வரையறுத்தவாறு. (23) |