6.வினையியல்

அஃறிணை வினை

குறிப்பு வினைமுற்றின் ஈறு

221பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.
 

பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப் பொருள்பற்றி வரும் வினைச்சொல் மேற்கூறப்பட்ட அஃறிணை வினையோ டொக்கும்; எ - று.

வாய்பாடு பற்றியும் பொருள்பற்றியும் கூறிய இருவகையும் எஞ்சாமற்றழுவுதற்கு `அன்னமரபின்' என்றார்.

ஒத்தலாவது, அஃறிணை வினைக்கோதிய ஈற்றுட் பொருந்து என வினைக்குறிப்பின் கண் வருங்காலும் , அவ்வவ் வீற்றான் அவ்வவ் விடமுங் காலமும் விளக்குதல்.

பொருந்துவனவாவன, ஆகாரமும் வகாரமுமொழித்துக் குற்றகர மூன்றும் அகரமுமாம், அவற்றுட் டகரமூர்ந்த குற்றுகரம் ஒன்றன் படர்க்கை (சொல் - 217) என்புழிக் கூறுதலான் , ஒழிந்த மூன்றும் ஈண்டுக் கொள்ளப்படும் . அவை அப்பால் விளக்குதல் மேற்காட்டப்பட்டனவற்றுட் கண்டு கொள்க.

(24)