6.வினையியல்

விரவு வினை

பெயர் , முறை , தொகை

222முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி
இன்மை செப்பல் வேறென் கிளவி
செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னும்
அம்முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி
இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய.
 

முன்னிலை முதலாகச் செய்தவென்ப தீறாகக் கூறிய முறையானின்ற எட்டுச் சொல்லும் , பொதுமையிற் பிரிந்து ஒருகால் உயர்திணையுணர்த்தியும் , ஒருகால் அஃறிணை யுணர்த்தியும் , வேறுபடுந் தொழிலையுடையவாய் , இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்தவுரிமைய; எ - று.

முன்னிலை வினைச்சொல்லாவது எதிர்முகமாய் நின்றான் தொழிலுணர்த்துவது.

வியங்கோள் - ஏவற்பொருட்டாய் வருவது, வாழ்த்துதன் முதலாகிய பிறபொருளுமுடைத்தாகலின் , இக்குறி மிகுதி நோக்கிச் சென்ற குறியென வுணர்க.

வினையெஞ்சுகிளவி - வினையை யொழிபாகவுடையவினை

இன்மை செப்பல் - இல்லை, இல் என்பன.

வேறென்பது - தன்னை யுணர்த்தி நின்றது.

செய்ம்மனவென்பது - மனவீற்று முற்றாய் எதிர்காலமுணர்த்தும் , செய்யுமென்பது - முற்றும் எச்சமுமாகிய இரு நிலைமையுமுடைத்தாய் உம்மீற்றான் நிகழ்காலமுணர்த்தும், செய்தவென்பது - அகரவீற்றெச்சமாய் இறந்தகாலமுணர்த்தும்.

செய்ம்மன முதலாகிய மூன்றுவாய்பாட்டானும், அவ்வீற்றவாய்க் காலமுணர்த்தும் உண்மன , உண்ணும், உண்ட என்னுந் தொடக்கத்தன வெல்லாந் தழுவப்பட்டன . அவற்றான் .அவை தழுவப்பட்டவா றென்னை யெனின் :- எல்லாத் தொழிலும் செய்தல் வேறுபாடாகலின் , பொதுவாகிய செய்தல் எல்லாத் தொழிலையும் அகப்படுத்து நிற்கும் ; அதனான் அவற்றான் அவை தழுவப்படு மென்க , அவை பொதுவுஞ் சிறப்பு மல்லவேல் , என் செய்யாநின்றான் என்று வினாயவழி , உண்ணாநின்றான் எனச் செப்புதல் இயையாதா மென்க. இது செய்து செய்பு என்பனவற்றிற்கு மொக்கும்.

அஃதேல் , சிலவற்றை ஈற்றானுணர்த்திச் சிலவற்றை வாய்பாட்டானுணர்த்திய தென்னையெனின் :- அம்மீறும் அன்னீறும் ஐயீறும் முதலாகிய சொற்கள் காலப்பன்மையான் வரும் வாய்பாட்டுப் பன்மையாற் சூத்திரம் பெருகுமென்றஞ்சி அவற்றை ஈற்றானுணர்த்திக் கால வேறுபாடு இலேசாற்கொள்ள வைத்தார், காலப்பன்மையில்லனவற்றை வாய்பாட்டானு முணர்த்துப, ஈற்றானு முணர்த்துப.

முற்றாதலும் பலவாய்பட்டாற் பயின்று வருதலு முடைமையான், முன்னிலை வினையை முன்வைத்தார். ஏவற்பொருண்மை முன்னிலை வினைக்கண்ணு முண்மையிற் பொருளியை புடைத்தாகலானும் இடங்குறித்து முற்றாய் வருதலொப்புமையானும், அதன்பின் வியங்கோள் வைத்தார். அதன் பின், முற்றாதலொப்புமையான் இன்மைசெப்பல் வேறென்கிளவி செய்ம்மன வென்பனவற்றை வைத்தன் முறைமையாயினும், முற்றின்கண் வினையெச்ச முண்மையானும், ஈற்றுப்பன்மையொடு பயின்று வருதலானும், வினையெச்சம் வைத்தார். இன்மை பற்றி வரும் வினையெச்சமு முண்மை யான் அதனோடியைய இன்மை செப்பல் வைத்தால். வினைக் குறிப்பாத லொப்புமையானும், செய்ம்மனவிற் பயிற்சி யுடைமையானும். அதன்பின் வேறென் கிளவி வைத்தார்.முற்றாத லொப்புமையான், அதன்பின் செய்ம்மன வைத்தார் . முற்றாநிலைமையுமுடைத்தாகலின். அதன்பின் செய்யு மென்பது வைத்தார். பெயரெச்ச மாதலொப்புமையான் அதன்பின் செய்த வென்பது வைத்தார். இவ்வா றியைபுபற்றி வைத்தமையான், `அம்முறை நின்ற' வென்றார்.

திரிபுவேறுபடூஉஞ் செய்தியவாகிய வெனவே, வேறுவே றுணர்த்தினல்லது ஒரு சொற் சொல்லுதற்கண் இருதிணையுமுணர்த்தாமை பெறுதும்.

(25)