6.வினையியல்

விரவு வினை

ஏனை வினைகள்

225எஞ்சிய கிளவியிடத்தொடு சிவணி
ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே.
 

முன்னிலைவினை யொழித்து ஒழிந்த ஏழுவினைச் சொல்லும் மூன்றிடத்திற்கும் ஐந்துபாற்கு முரிய, தத்தம் பொருட்கண் தோன்றுமிடத்து; எ - று.

இவ்வாறு பொதுவகையான் எல்லாவிடத்தோடும் எல்லாப்பாற்கும் உரியவாத லெய்தினவெனினும், முன்னர் விலக்கப்படுவனவொழித்து ஒழிந்த விடமும் பாலும் பற்றி வருமாறு ஈண்டுக் காட்டப்படும்.

எ - டு : அவன் செல்க,அவள் செல்க,அவர் செல்க,அது செல்க,அவை செல்க எனவும்; உழுது வந்தேன், உழுது வந்தேம்,உழுது வந்தாய்,உழுது வந்தீர்,உழுது வந்தான்,உழுது வந்தாள்,உழுது வந்தார், உழுது வந்தது,உழுது வந்தன எனவும்; யானில்லை, யாமில்லை, நீயில்லை, நீரில்லை, அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவையில்லை எனவும்; யான் வேறு,யாம் வேறு,நீ வேறு,நீயிர் வேறு,அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு எனவும்; யானுண்மன. யாமுண்மன, நீயுண்மன, நீயிருண்மன, அவனுண்மன, அவளுண்மன, அவருண்மன, அதுவுண்மன, அவையுண்மன, எனவும் யானுண்ணுமூண், யாமுண்ணுமூண், நீயுண்ணுமூண், நீயிருண்ணுமூண், அவனுண்ணுமூண், அவளுண்ணுமூண், அவருண்ணுமூண், அதுவுண்ணுமூண், அவையுண்ணுமூண் எனவும்; அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் எனவும்; யானுண்டவூண், யாமுண்டவூண், நீயுண்டவூண், நீயிருண்டவூண், அவனுண்டவூண், அவளுண்டவூண், அவருண்டவூண், அதுவுண்டவூண், அவையுண்டவூண் எனவும் வரும்.

(28)