6.வினையியல்

விரவு வினை

வியங்கோள் வினை

226அவற்றுள்
முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடும்
மன்னா தாகும் வியங்கோள் கிளவி.
 

மேல் `எஞ்சிய கிளவி' (சொல்-225) எனப் பட்ட ஏழனுள், வியங்கோட்கிளவி, முன்னிலையும் தன்மையுமாகிய இரண்டிடத்தோடு நிலைபெறாதாம்;எ - று.

ஆயீரிடத்தொடு கொள்ளாதென்னாது மன்னாதாகு மென்றதனான், அவ்விடத்தொடு சிறுபான்மை வருதல் கொள்க. மன்னுதல் பெரும் பான்மையும் நிகழ்தல். சிறுபான்மை வருவன, நீ வாழ்க என்னும் வாழ்த்துதற் பொருண்மைக்கண்ணும், யானுநின்னொடுடனுறைக என்னும் வேண்டிக் கோடற் பொருண்மைக்கண்ணும் வருவனவாம். `கடாவுகபாக நின் கால்வனெடுந்தேர்' என்பதும் வேண்டிக்கோடற் பெருண்மைக்கண் வந்தராம்.

தன்மைக்கண் ஏவலில்லை. முன்னிலைக்கண் ஏவல் வருவதுண்டேற் கண்டு கொள்க.

அஃதேல் வியங்கோளீறு கூறாராயிற் றென்னை யெனின்:- எழுத்தோத்தினுள் `ஏவல் கண்ணிய வியங்கோட்கிளவியும்' (எழு-210) என அகரவீற்றுள் எடுத்தலாற் பொருந்திய மெய்யூர்ந்து அகரவீறாய் வருதலும், `செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்' (சொல்-13) எனவும், `சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்' (சொல்-463) எனவும், `மறைக்குங் காலை மரீ இய தொரா அல்' (சொல்-443) எனவும், உடம்பொடு புணர்த்தலான் அல்லீறாய் வருதலும் ஆலீறாய் வருதலும் பெறுதலின் வியங்கோளீறுங் கூறினாரெனவே படும். பிறவு முளவேற் கொள்க.

(29)