பொதுவகையா னெய்தியவற்றுள், வியங்கோட் கிளவிக்குஞ் செய்யுமென்னுங் கிளவிக்கும் எய்தாதன விலக்கி இனி நிறுத்த முறையானே வினையெச்சத்தினது பாகு பாடுணர்த்துகின்றார். செய்தென்பது முதலாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் வினையெச்சமாம்; எ - று. அவ்வகையொன்பது மென்றது இறுதி நின்ற இடைச்சொல்லான் வேறுபட்ட ஒன்பது மென்றவாறு. அவ்விடைச் சொல்லாவன உகரமும் ஊகாரமும் , புகரமும் எனவும் இயரும், இயவும், இன்னும், அகரமும், குகரமுமாம்.1 `செய்கென் கிளவி வினையொடு முடியினும்' (சொல் - 204) எனவும் , `செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்' (சொல் - 450) எனவும் இறுதியிடைச்சொ லேற்றவாற்றாற் பிரித்துணர வாய்பா டோதினாற்போல ஏற்றவாற்றான் இறுதியிடைச்சொற் பிரித்துணர்ந்து கொள்ள ஈண்டும் வாய்பாடுபற்றி யோதினார். உகரம் , கடதறவூர்ந்து இயல்பாயும் , ஏனையெழுத்தூர்ந்து இகரமாய்த் திரிந்தும் , நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத் தான் கெட்டும் , இறந்த காலம் பற்றி வரும் . இவ்வுகரவீறு இகரமாதலும் , யகரம் வரக் கெடுதலும் `வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய' (சொல் 457) என்பதனாற் பெறப்படும். எ - டு :நக்கு, உண்டு , வந்து , சென்று எனவும் ; எஞ்சி உரிஞி ஓடி எனவும் ; ஆய் , போய் எனவும் வரும் . சினைஇ , உரைஇ , இரீஇ , உடீஇ , பராஅய் , தூஉய் , தாஅய் என்பனவோவெனின் ;- அவை செய்யுண்முடிபென்க. ஆகி , போகி , ஓடி, மலர்த்தி , ஆற்றி என்புழி , முதனிலை குற்றுகரவீறாதலின் , ஏனையெழுத்தாத லறிக. கடதறவென்பன குற்றுகரத்தொடு வருமிடமும் தனிமெய்யாய் வருமிடமும் தெரிந் துணர்க. அஃதேல் , ஆய் என்பதனை யகரவீறென்றும் , ஓடியென்பதனை இகரவீறென்றுங்கொள்ளாது , உகரவீறென்ற தென்னையெனின் ;- நன்று சொன்னாய் : இகரவிறுதி இடைச்சொல்லாயின் , இறுதியிடைச்சொல் எல்லாத் தொழிலும் பற்றி வருதலிற் செலவு வரவென்பனவற்றோடும் வரல் வேண்டும் . இனிச் செய்தெனச்சத் துகரமும் இறுதியிடைச் சொல் லாதலின் ஆகுதல் , ஓடுதலென்னுந் தொழில் பற்றியும் வரல் வேண்டும் , செலவு வரவு பற்றி இகரம் வாராமையானும் , ஆகுதல் ஓடுதல் பற்றி உகரம் வாராமையானும் , இறுதியிடைச் சொல் இகரமேயாக உகரமேயாக ஒன்றாவதல்லது இரண்டெனப் படாதாம். உகரம் ஒன்றாய் நின்று கடதற வூர்ந்த விதிவினைக்கட் பயின்று வருதலானும் , எதிர்மறை யெச்சமெல்லாம் பெரும்பான்மையும் உகரவீறாயல்லது வாராமையானும் , உகரம் இயல்பாக இகரம் அதன் றிரிபென்றலே முறைமை யென்க. யகரவீற்றிற்கும் இஃதொக்கும். ஊகாரம் உண்ணூவந்தான் , தின்னூவந்தான் எனப் பின் வருந்தொழிற்கு இடையின்றி முன்வருந் தொழின்மேல் இறந்தகாலம் பற்றி வரும் . அஃது உண்ணா என ஆகாரமாயும் வரும். பகரவுகரம் நகுபு வந்தான் என நிகழ்காலம் பற்றி வரும். நகா நின்று வந்தான் என்றவாறு. ஈண்டு நிகழ்காலமென்றது முடிக்குஞ் சொல்லுணரப்படுந் தொழிலோடு உடனிகழ்தல், உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும் , ஏற்றவழிப் பெறுதல் கொள்க. எனவென்பது , கடதற வூர்ந்து இறந்த காலம் பற்றி முடிக்குஞ் சொல்லா னுணர்த்தப்படுந் தொழிற்குத் தன் முதனிலைத் தொழில் காரணமென்பதுபட வரும். எ - டு : சோலைபுக்கென வெப்ப நீங்கிற்று ; உண்டெனப் பசி கெட்டது ; உரைத்தென உணர்ந்தான்; மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று என வரும் . எஞ்சியென எனவும் , உரிஞியென எனவும் , ஏனை எழுத்தோடும் வருமாறறிந் தொட்டிக் கொள்க. இயர் , இய என்பன , எதிர்காலம் பற்றி , உண்ணியர் , திண்ணியர் ; உண்ணிய , திண்ணிய என வரும் . போகியர் , போகிய என ஏற்றவழிக் ககரம் பெற்று வருதலுங் கொள்க. இன் எதிர்காலம் பற்றிக் காரணப்பொருட்டாய் வரும். எ - டு : மழைபெய்யிற் குளநிறையும் ; மெய்யுணரின் வீடெளிதாம் என வரும். நடப்பின் , உரைப்பின் என ஏற்ற வழிப் பகரம் பெற்று வருதலுங் கொள்க. அகரம் , மழை பெய்யக் குளம் நிறைந்தது ; ஞாயிறு பட வந்தான் ; உண்ண வந்தான் என மூன்று காலமும் பற்றி வரும். உரைப்ப , உரைக்க என ஏற்றவழிப் பகரமுங் ககரமும் பெறுதல் கொள்க. குகரம் உணற்கு வந்தான்; தினற்கு வந்தான் என வெதிர் காலம் பற்றி வரும். புகரமும் குகரமும் உகரத்தின் கண்ணும் , எனவும் இயவும் அகரத்தின் கண்ணும் அடங்குமெனின் ;- ஆரீற்றின் மார் அடங்காமைக்கு உரைத்தாங் குரைக்க. 2செயற்கென்னும் வினையெச்சம் நான்கனுரு பேற்று நின்ற தொழிற்பெயரின் வேறாதல் கிளவியாக்கத்துட் கூறினாம். திரியாது நிற்கும் ஊகாரமும் , புகரமும், எனவும் , இயரும் இயவுமென்னும் ஐந்தீற்றுவினையெச்சமும் வழக்கினுள் இக்காலத்து வாராவாயினும் , சான்றோர் செய்யுளுள் அவற்றது வாய்பாட்டு வேற்றுமையெல்லாங் கண்டு கொள்க. (31)
1. செய்து செய்தென செயற்கு என்னும் வினையெச்சங்களின் விகுதி `உகர' மும் எனவும் `குகர' மும் எனவும் கொள்வது பொருந்தாது. இவற்றைத் துகரமும் துவ்வோ டெனவும் அல்லொடு குகரமும் எனக் கொள்வதே பொருந்தும். இறுதியிடைச்சொல் - விகுதி. நக்கு, உண்டு , வந்து , சென்று என்பவற்றில் உகரம் கடதறவூர்ந்து இயல்பாயிற்று; எஞ்சி , உரிஞி , ஓடி என்பவற்றில் ஏனையெழுத் தூர்ந்து இகரமாய்த் திரிந்தது ; ஆய் போய் என்பனவற்றில் நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத்தான் கெட்டது என்பது சேனாவரையர் கருத்து. 2. செயற்கென்னும் வினையெச்சம் நான்கனுருபேற்று நின்ற தொழிற்பெயரின் வேறென்று சேனாவரையர் கூறினும்; அதை நான்காம் வேற்றுமைத் தொழிற் பெயரே எச்சப் பொருள் பட வந்ததாகக் கூறவது பொருந்தும். |