6.வினையியல்

விரவு வினை

வினையெச்ச வாய்பாடுகள்

229பின்முன் கால்கடை வழிஇடத்து என்னும்
அன்ன மரபின் காலங் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றியல் பினவே.
 

பின்னும் முன்னும் , காலும் கடைமையும் , வழியும் இடத்தும் என்னு மீற்றுவாய் வருவனவும் , அவைபோலக் காலங்கண்ணி வருவன பிறவும் , வினையெச்சமாம்;எ - று.

எ - டு : நீயிர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார் எனவும் , நீயிவ்வாறு கூறுகின்றபின் உரைப்பதுண்டோ எனவும் , பின் இறப்பும் நிகழ்வும் பற்றியும் மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது என முன் இறந்தகாலம் பற்றியும் , `வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்' எனவும் , `அகன்றவர் திறத்தினி நாடுங்கால்' எனவும் , காலீறு மூன்று காலமும் பற்றியும் `தொடர் கூரத் தூவாமை வந்தக் கடை' எனக் கடையீறு இறந்த காலம் பற்றியும் , உரைத்த வழி , உரைக்கும் வழி , உரைத்தவிடத்து உரைக்குமிடத்து என வழியென்னுமீறும் இடத்தென்னுமீறும் மூன்று காலமும் பற்றியும் வரும் . கால் , வழி, இடத்தென்பனவற்றின் நிகழ்காலத்து வாய்பாடு எதிர்காலத்திற்கு மேற்ற லறிக.

கூதிர் போயபின் வந்தான் எனவும் , நின்றவிடத்து நின்றான் எனவும் , பின் முதலாயின பெயரெச்சத்தோடும் வந்தவழி , இறப்பு முதலாகிய காலங் கண்ணாமையின் அவற்றை நீக்குதற்குக் `காலங்கண்ணிய' வென்றார்.

காலவேறுபட்டான் வரும் வாய்பாட்டுப் பன்மையெல்லாம் ஒரு வாய்பாட்டாற் றழுவலாகாமையின் , இவற்றை ஈறுபற்றி யோதினார்.

அன்ன மரபிற் காலங் கண்ணிய வென்ன கிளவியு மென்றதனான் உண்பாக்கு வேபாக்கு என வரும் பாக்கீறும் , உண்பான் வருவான் என்னும் ஆனீறும் , `நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே' ( குறிஞ்சிக்கலி - 3) என்னும் உம்மீறும், `அற்றா லளவறிந் துண்க' ( குறள் - 943) என்னும் ஆலீறும் `எதிர்மறைபற்றிக்' கூறாமற் குறித்ததன்மேற் செல்லும் (கலி - 1) என வரும் மல்லீறும் , `கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்' (குறள் - 701) என்னும் மகர வைகார வீறுங் கொள்க.

என்ன கிளவியு மென்றதனான் இன்றி அன்றி அல்லது அல்லால் என வருங் குறிப்புவினையெச்சமுங் கொள்க.

(32)