திணை துணிந்து பால்துணியாத ஐயப் பொருளை அவ்வத்திணைப் பன்மையாற் கூறுக; எ-று. கிளவி என்றது ஈண்டுப் பொருளை. ஐயப்பொருளாவது சிறப்பியல்பால் தோன்றாது பொது வியல்பால் தோன்றிய பொருள்1. எ - டு: `ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இஃதோ தோன்றுவார்' எனவும், ' ஒன்றோ பலவோ செய் புக்கன' எனவும் வரும். திணைவயின் என்னாது தானறிபொருள்வயின் எனப் பொதுப்படக் கூறியவதனான், `ஒருவன்கொல்லோ பலர் கொல்லோ கறவை யுய்த்த கள்வர்' எனவும், `ஒருத்தி கொல்லோ பலர்கொல்லோ இக்குருக்கத்தி நீழல் வண்டலயர்ந்தார்' எனவும், திணையோடு ஆண்மை பெண்மை துணிந்த பன்மை யொருமைப்பால் ஐயமுங் கொள்ளப்படும். ஒருமையாற் கூறின் வழிப்படுதல் நோக்கிப்-பன்மை கூறல் என வழாநிலை போலக் கூறினாரேனும், ஒருமையைப் பன்மையாற் கூறுதலும் வழுவாதலின், ஐயப்பொருண்மேல் சொல் நிகழுமாறு உணர்த்திய முகத்தால் பால்வழு அமைத்தவாறாம். (23)
1. சிறப்பியல்பு பால்; பொதுவியல்பு திணை. |