வினைமுதன் முடிபினவாகிய அம்மூன்றுசொல்லும் , சினைவினை நின்று சினைவினையோடு முடியாது முதல் வினையோடு முடியினும் , வினையா னொருதன்மைய; எ - று. வினையா னொருதன்மையை வென்றது, முதல்வினையோடு முடியினும் முதலொடு சினைக்கொற்றுமையுண்மை யாற் பிறவினை கொண்டனவாகா , வினைமுதல் வினை கொண்டனவேயா மென்றவாறு. எ - டு : கையிற்று வீழ்ந்தான் , கையிறூ வீழ்ந்தான் , கையிறுபு வீழ்ந்தான் எனவரும் . `உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய' என்புழிப் போலக் கையிற்றென்னுஞ் செய்தெனெச்சம் கையிறவெனச் செயவெனெச்சப் பொருட்டாய் நின்றதெனவமையும் , இச் சூத்திரம் வேண்டாவெனின் :- அற்றன்று வினைமுதல்வினை கொள்ளாதவழியன்றே அது பிறபொருட்டாயது ; வினை முதல் வினைகொண்டு தன் பொருளே யுணர்த்துவதனைப் பிறபொருண்மேனின்றதென்றல் பொருந்தாமையின் , அது கடாவன்றென்க. (34) |