முதனிலை மூன்றமல்லாத பிற வினையெச்சம் வினை முதல் வினையானும் ஆண்டு வந்து பொருந்தும் பிற வினையானும் , வரையறையின்றித் தாமியலுமாற்றான் முடியும் ; எ - டு : மழை பெய்தெனப் புகழ் பெற்றது, மழை பெய்தென மரங்குழைத்தது எனவும் ; மழை பெய்யிய ரெழுந்தது. மழைபெய்யியர் பலி கொடுத்தார் எனவும்; மழை பெய்யிய முழங்கும் , மழை பெய்யிய வான் பழிச்சுதும் எனவும்; மழை பெய்யிற் புகழ்பெறும் , மழைபெய்யிற் குளநிறையும் எனவும் ; மழை பெய்யப் புகழ்பெற்றது , மழை பெய்ய மரங்குழைத்தது எனவும்; மழை பெய்தற்கு முழங்கும் மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் எனவும் , இறந்தபின் னிளமை வாராது. கணவன் இனிதுண்டபின் காதலி முகமலர்ந்தது எனவும் அவை வினை முதல் வினையும் பிறவினையும் கொண்டவாறு கண்டு கொள்க, அல்லனவும் இருவகை வினையுங்கோடல் வழக்கினுட் கண்டு கொள்க. வரையறையின்றி இருவகை வினையுங்கோடலின் `வினையுங் குறிப்பு - நினையத் தோன்றிய முடிபா கும்மே' (சொல் - 432) என்னும் பொதுவிதியான் முடிவனவற்றை ஈண்டுக் கூறல் வேண்டாவெனின் , வினையெச்சங்களுள் ஒருசாரன வினைமுதல் வினைகொள்ளுமென்றதனான் , ஏனையெச்சம் பிறவினையே கொள்ளுமோ இருவகை வினையுங் கொள்ளுமோ என்றையமாம்; அதனான் , ஐயநீங்க இவ்வாறு கூறல் வேண்டு மென்பது. அஃதேல் , வினையொடு முடிதல் ஈண்டுக் கூறப்பட்டமையின் எச்சவியலுள் `குறிப்பு முடிபாகும்' என வமையும், வினையுமெனல் வேண்டாவெனின் :- குறிப்புமென்னு மும்மையாற் றழுவப்படுவது சேய்த்தாகலிற் றெற்றென விளக்காமையானும் , வினைமுதலென்பது பெயர்க்கும் வினைக்கும் பொதுவாகலானும் , வினையுமெனல் வேண்டுமென்பது. (35) |