6.வினையியல்

விரவு வினை

பெயரெச்ச வாய்பாடுகள்

234நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.
 

வினையெச்சமுணர்த்தி, இனிப் பெயரச்சமுணர்த்துகின்றார்.

செய்யும், செய்த என்னுஞ்சொற்கள், தொழின் முதனிலை யெட்டனுள் இன்னதற்கு இது பயனாக என்னும் இரண்டொழித்து ஏனை யாறுபொருட்கும் ஒத்த வுரிமைய;

இவற்றிற் கொத்தவுரிமைய வெனவே, ஒழிந்த விரண்டற்கும் இவற்றோடொப்ப வுரியவாகா, சிறுபான்மையுரிய வென்றவாறாம்.

எ - டு :வாழுமில், கற்குநூல், துயிலுங்காலம், வனையுங்கோல், ஓதும் பார்ப்பான், உண்ணுமூண் எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்து உம்மீறு காலவெழுத்துப் பெறாது ஆறு பொருட்கு முரித்தாய் வந்தவாறு. புக்கவில், உண்டசோறு, வந்தநாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு எனச் செய்தவென்னும் பெயரெச்சத் திறுதியகரம் கடதறவும் யகர னகரமும் ஊர்ந்து அப் பொருட்டு குரித்தாய் வந்தவாறு, நோய் தீருமருந்து, நோய் தீர்ந்த மருந்து என்னு மேதுப் பொருண்மை கருவிக்க ணடங்கும்; அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான் ஆ கொடுத்த பார்ப்பான் எனவும்; ஆடை யொலிக்குங் கூலி எனவும்; ஆடையொலித்த கூலி எனவும்: ஏனை யிரண்டற்குஞ் சிறுபான்மையுரியவாய் வந்தவாறு.

எல்லைப்பொருள் பஃறொழில் பற்றி வருஞ் சிறப்பின்றா கலிற்றொழின் முதலொடு கூறாது இன்மை யுடைமை நாற்றந் தீர்த்தல், (சொல்-78) என்னும் பொருண்மையாற் றழீஇக்கொண்டாராகலின், பழமுதிருங் கோடு, பழமுதிர்ந்த கோடு எனச் சிறுபான்மை எல்லைப் பொருட்குரியவாதலுங் கொள்க.

நின்முகங் காணு மருந்தினே னென்னுமால் (குறிஞ்சிக்கலி-24) என்புழிக் காட்சியை மருந்தென்றா னாதலின் காணு மருந்தென்பது வினைப்பெயர் கொண்டதாம். பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின் (குறள்-537) என்புழிச் பொச்சாவாக் கருவியென்பது மது. ஆறுசென்றவியர் என்புழி வியர் ஆறுசெறலான் வந்த காரியமாகலின், செயப்படு பொருட் கணடங்கும். நூற்ற நூலானியன்ற கலிங்கமும் ஒற்றுமை நயத்தால் நூற்ற கலிங்க மெனப்படும். நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ (பதிற்றுப்பத்து, 2-ஆம் பத்து, 12) எனப் பெயரெச்சத்தி னெதிர்மறை பொருட்பெயர் கொண்டு நின்றதாம், பிறவுங் கூறப்பட்ட பொருட்க ணடங்குமாறறிந் தடக்கிக் கொள்க. உண்டான் சாத்தன், மெழுகிற்றுத் திண்ணை என்புழி உண்டான் மெழுகிற்று என்னு முற்றுச்சொல் வினை முதலுஞ் செயப்படு பொருளுமாகிய பொருட் குரியவாமாறு போல, இவ்விறு வகைப் பெயரெச்சமும் நிலமுதலாகிய பொருட்கு ரியவாமென அவற்றது அறுபொருட்கு முரிமை உணர்த்தியவாறு. முடிவு எச்சவியலுட் பெறப்படும்.

பொருளைக் கிளவியென்றார்.

நிலமுதலாயினவற்றைப் பெயரெச்சப் பொருளென்னாது முடிக்குஞ் சொல்லெனின் அவ்வறுபொருட்கு மென்னாது அவ்வறு பெயர்க்கு மென்றோதுவார். ஓதவே, பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே (சொல்-433) என்னுஞ் சூத்திரம் வேண்டாவாம்; அதனான் இவை பொருளென்றலே யுரை.

அம் ஆமென்பன முதலாக அகரமீறாகக் கிடந்த இறுதி இடைச் சொற்குக் கூறப்பட்ட காலவெழுத்துச் சிறிய சிதைந்துவரினும், சிறுபான்மை பிறவெழுத்துப் பெறினும், நுண்ணுணர்வுடையோர் வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க.

(37)