6.வினையியல்

விரவு வினை

செய்யும் என்னும் வாய்பாடு

235அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி
முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே.
 

நிலமுதலாகிய பொருளொடு வருங்கால் செய்யுமென்னுஞ் சொல், விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை யென்னும் மூவகைக்கும், உரித்தாம்; எ - று.

உரித்தாய் வருமாறு `எஞ்சிய கிளவி' (சொல்-225) என்னுஞ் சூத்திரத்திற் காட்டினாம்.

அவற்றொடு வருவழியெனச் செய்யுமென்னுஞ் சொல் அப்பொருண்மைக் குரித்தாயும் உரித்தன்றியும் வரும் இருநிலைமையும் உடைத்தென்பது பெறுதும். அவற்றொடு வரு நிலைமை பெயரெஞ்சுகிளவியாம்; அவற்றொடு வாரா நிலைமை முற்றுச்சொல்லாம். அஃதேல், அது முற்றுச் சொல்லாதற்கண்ணும் பெயரெஞ்சு கிளவியாதற்கண்ணும் வேற்றுமை யென்னையெனின்:-ஏனைமுற்றிற்கும் ஏனையெச்சத்திற்கும் வேற்றுமையாவதே ஈண்டும் வேற்றுமையாமென்க. முற்றுச் சொல்லிற்கும் எச்சத்திற்கும் வேற்றுமை யாதெனின் :- பிறிதோர் சொல்லோடியையாது தாமே தொடராதற்கேற்கும் வினைச்சொல் முற்றாம்; பிறிதோர் சொற்பற்றியல்லது நிற்றலாற்றா வினைச்சொல் எச்சமாம்; இது தம்முள் வேற்றுமை யென்க. அஃதேல், உண்டானென்பது சாத்தனென்னும் பெயரவாவியன்றே நிற்பது; தாமே தொடராமென்றது என்னை யெனின் :- அற்றன்று; உண்டான் சாத்தான் என்றவழி, எத்தையென்னும் அவாய் நிலைக்கண் சோற்றையென்பது வந்தியைந் தாற்போல, உண்டான் என்றவழி யாரென்னும் அவாய் நிலைக்கண் சாத்தனென்பது வந்தியைவதல்லது, அப்பெயர்பற்றியல்லது நிற்றலாற்றா நிலைமைத்தன்று, அச்சொல்லென்பது, இவ்வேற்றுமை விளங்க ஆசிரியர் முற்றுச் சொல்லென்னும், எச்சமென்றும், அவற்றிற்குப் பெயர் கொடுத்தார்.

(38)