6.வினையியல்

விரவு வினை

இறந்தகாலச் சொல் எதிர்காலச் சொல்லோடு இயைதல்

239செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்.
 

செய்தென்னும் வினையெச்சத்தினது இறந்த காலம் வாராக்காலத்தை எய்துமிடமுடைத்து; எ - று.

ஈண்டுச் செய்தெனெச்சத்திறந்தகால மென்றது முடிபாய் வரும், வினைச்சொல்லா லுணர்த்தப்படுந் தொழிற்கு அவ்வெச்சத்தா லுணர்த்தப்படுந் தொழில் முன்நிகழ்தலை. அது வாராக்கால மெய்துதலாவது, அம்முன்னிகழ்வு சிதையாமல் அவ்வெச்சம் எதிர்காலத்து வருதல்.

நீயுண்டு வருவாய், உழுது வருவாய் எனச் செய்தெனெச்சம் பொருள் சிதையாமல் எதிர்காலத்து வந்தவாறு கண்டு கொள்க.

`எய்திட னுடைத்தே வாராக் காலம்' என்றதனான், உண்டு வந்தான், உழுது வந்தான் என அவ்வெச்சம் இறந்த காலத்து வருதல் இலக்கண மென்பதாம்.

இறந்த காலத்துச் சொல் எதிர்காலத்து வந்ததாயினும் அமைகவெனக் காலவழு வமைத்தவாறு.

(42)