உருபெனச் சொல்லுமிடத்தும், ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணைப் பொதுச் சொற்கண்ணும், இவ்விரு கூற்றினும் ஐயப்புலப் பொதுச் சொல்லாதல் உரித்து; எ-று. எனவே, `ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ தோன்றா நின்ற உருபு' எனவும், `ஒன்றுகொல்லோ பல கொல்லோ செய் புக்க உருபு' எனவும், `குற்றிகொல்லோ மகன்கொல்லோ தோன்றாநின்ற உருபு' எனவும், 'ஒன்று கொல்லோ பலகொல்லோ செய் புக்க பெற்றம்' எனவும் சொல்லுக என்பதாம். ஐயக்கிளவி யென்பது அதிகாரத்தாற் பெற்றாம். உருபினும் என்னாது உருபென மொழியினும் என்றதனான், உருபின் பொருளவாகிய வடிவு , பிழம்பு , பிண்டமென்னுந் தொடக்கத்தனவும் கொள்க. பன்மை கூறல் உயர்திணைப்பா லையத்திற்கு உரித்தென்றும், உருபென மொழிதல் திணை யையத்திற்கு உரித்தென்றும், உரையாசிரியர் கூறினாராலெனின்:-அவை அவற்றிற்கே உரியவாயின், அஃறிணைப் பிரிப்பு என்றாற்போல உயர்திணைப்பான் மயக்குற்ற என்றும், திணையையத்து என்றும், விதந் தோதுவர் ஆசிரியர் ; அவ்வாறு ஓதாமையானும், நடையுள்1 அவை பொதுவாய் வருதலானும், அவை போலியுரை யென்க. ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ என்றற் றொடக்கத்து உயர்திணைப் பன்மை யொருமைப்பால் ஐயத்திற்கு உருபு முதலாயின ஏலாமையும், திணையையத்திற்கும் ஏனைப்பா லையத்திற்கும் ஏற்புடைமையும், சுட்டி யுணர்க என்பது போதரச் `சுட்டுங்காலை' யென்றார்.சுட்டுதல்-கருதுதல். (24)
1. நடை என்றது வழக்கை. |