6.வினையியல்

விரவு வினை

முக்காலங்கட்கும் உரிய இயற்கையை நிகழ்காலத்தாற் கூறதல்

240முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்.
 

மூன்று காலத்தும் உளதாம் இயல்பையுடைய எல்லாப் பொருளையும் நிகழ்காலத்துப் பொருணிலையுடைய செய்யுமென்னுஞ் சொல்லாற் கிளக்க; எ - று.

முந்நிலைக்காலமுந்தோன்று மியற்கை யெம்முறைப் பொருளுமாவன மலையது நிலையும் ஞாயிறு திங்கள் தியக்கமு முதலாயின. அவற்றை இறந்த காலச்சொல்லானும், எதிர் காலச்சொல்லானும். ஏனை நிகழ்காலச் சொல்லானும். சொல்லாது இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் அகப்படுத்து மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்குஞ்செய்யுமென்னுஞ் சொல்லாற் சொல்லுக என்றவாறு.

பொதுச்சொற் கிளத்தல்வேண்டு மெனவே, முற்றானும் பெயரெச்சத்தானுங் கிளக்க வென்பதாம்.

மலை நிற்கும், ஞாயி றியங்கும், திங்க ளியங்கும் எனவும்; `வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதருந், தண் கடல் வையத்து' (பெரும்பா-17) எனவும் வரும்.

நிகழ்காலச்சொல் சொல்லாயினும் ஒருகாற் பொதுவாக லுடைமையாற் `பொதுசொல்' என்றார்.

நிகழ்காலச்சொல் இறந்தகாலமும் எதிர்காலமு முணர்த்துதல் வழுவாயினும் அமைகவென அமைத்தவாறு,

(43)