6.வினையியல்

விரவு வினை

விரைவுப்பொருளில் கால மயங்குதல்

241வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்.
 

எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒருபடியாக வரும் வினைச்சொற் பொருண்மை இறந்தகாலத்தாற் சொல்லுதல் விரைவு பொருளையுடைய; எ - று.

சோறு பாணித்தவழி உண்ணாதிருந்தானைப் போகல் வேண்டுங் குறையுடையானொருவன் இன்னுமுண்டிலையோ என்றவழி, உண்டேன் போந்தேன் என்னும்; உண்ணா நின்றானும் உண்டேன் போந்தேன் என்னும்; ஆண்டு எதிர் காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உரிய பொருளை விரைவு பற்றி இறந்தகாலத்தாற் கூறியிருப்பதைக் காண்க.

தொழில் இறந்தனவல்லவேனும், சொல்லுவான் கருத்து வகையான் இறந்தனவாகச் சொல்லப்படுதலின், `குறிப்பொடு கிளத்தல்' என்றார்.

எதிர்காலத்துப் பொருண்மையைக் கிளத்தலும், நிகழ்காலத்துப் பொருண்மையைக் கிளத்தலும் என இரண்டாகலான் , `விரைந்த பொருள்' என்றார்.

(44)