6.வினையியல்

விரவு வினை

சிறப்புப்பொருளில் காலம் மயங்குதல்

242மிக்கதன் மருங்கின் வினைச் சொற் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வ தில்வழி நிகழுங் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே.
 

மிக்கதன்கண் நிகழும் வினைச்சொல்லை நோக்கித் திரிவின்றிப் பயக்கும் அம் மிக்கதனது பண்பைக் குறித்துவரும் வினைமுதற்சொல் சுட்டிச் சொல்லப்படுவதோர் வினைமுதலில்லாதவிடத்து, நிகழ்காலத்தான் யாப்புறுத்த பொருளை யுடைத்தாம்; எ - று.

முயற்சியும் தெய்வமுமாகிய காரணங்களுட் டெய்வஞ் சிறந்தமையான், அதற்குக் காரணமாகிய தவஞ்செய்தல் தாயைக்கோறன் முதலாகிய தொழிலை `மிக்கது' என்றார். தெய்வமாய இருவினை மிக்கதன்கண் வினைச் சொல்லாவன தவஞ்செய்தான், தாயைக் கொன்றான் என்னுந் தொடக்கத்தன. அப்பண்பு குறித்த வினை முதற்கிளவியாவன சுவர்க்கம் புகும், நிரயம் புகும் என்பன. யாவன் றவஞ்செய்தான் அவன் சுவர்க்கம் புகும், யாவன் றாயைக் கொன்றான் அவனிரயம் புகும் எனவும் ஒருவன் றவஞ்செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லி னிரயம் புகும் எனவும் மிக்கதன் வினைச்சொ னோக்கி அம்மிக்கதன் றிரிபில் பண்பு குறித்த வினைமுதற் கிளவி நிகழ்காலத்தான் வந்தவாறு கண்டு கொள்க.

அப்பண்பு குறித்த வென்பதற்கு மிக்கதாகிய இருவினைப் பயனுறுதல் அவ் வினைமுதற் கியல்பென்பது குறித்தவென்று உரைப்பினு மமையும்.

பொதுவகையாகக் கூறாது ஒருவற்சுட்டியவழி, அவன் றவஞ் செய்து சுவர்க்கம் புக்கான், புகுவன் என ஏனைக்காலத்தாற் சொல்லப் படுதலின், அவ்வாறு ஒருவற்சுட்டுதலை நீக்குதற்கு வினைமுதற்கிளவி யாயினுஞ் செய்வ தில்வழியென்றார். செய்வதென்பது, செய்கையை யென்பாரு முளர்.

வினைச் சொலென்றாரேனும், தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும். தாயைக் கொன்றா னிரயம் புகும் என வினைப் பெயராய் வருதலுங் கொள்க.

தவஞ்செய்யிற் சுவர்க்கம் புகுவன் என எதிர்காலத்தாற் சொல்லப் படுவதனை நிகழ்காலத்தாற் சொல்லுதல் வழுவாயினும் அமைகவென வழு அமைதியாம்.

அஃதேல், `இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை' (சொல்-245) என்புழி இது தெளிவாயடங்குமெனின்:- அற்றன்று; இயற்கையுந் தெளிவும் சிறந்த காரணமாகிய தெய்வத்தானாக பிறிதொன்றானாகத் திரிதலுடைய, இது திரிபின்றாகலானும், இறந்தகாலத்தாற் சொல்லப் படாமையானும், ஆண்டடங்காதென்பது. இதனது திரிபின்மையும் அவற்றது திரிபுடைமையும் விளக்குதற்கன்றே, ஆசிரியர் `மிக்கதன் மருங்கின்' என்றும், இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை என்றும் ஓதுவாராயிற்றென்பது.

(45)