6.வினையியல்

விரவு வினை

`இது செயல் வேண்டும்' என்னும் முற்று

243இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி
இருவயி னிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்.
 

இது செயல்வேண்டு மென்பதுபட வருஞ்சொல், தன்பாலானும் பிறன்பாலானுமென ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மையையுடைத்தாம்; எ - று.

தன்னென்றது செயலது வினைமுதலை.

ஓதல்வேண்டும் என்றவழி வேண்டுமென்பது ஓதற்கு வினைமுதலாயினாற்கும் அவனோதலை விரும்புந் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டு கொள்க.

இதனான் ஒருசார் வினைச்சொற் பொருள்படும் வேறுபாடுணர்த்தினார்; உணர்த்தாக்காற் றெற்றென விளங்காமையினென்பது.

(46)