6.வினையியல்

விரவு வினை

செயப்படுபொருள் வினைமுதல்போல வருதல்

246செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே.
 

செய்படுபொருளைச் செய்த வினைமுதல் போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கின்கண் இயலு மரபு; எ - று.

வழக்கியன்மரபெனவே, இலக்கண மன்றென்றவாறாம்.

எ - டு :திண்ணை மெழுகிற்று, கலங்கழீஇயிற்று என வரும்.

திண்ணை மெழுகப்பட்டது, கலங் கழுவப்பட்டது என்று மன் னாகற் பாலது, அவ்வாய்பாடன்றி வினைமுதல் வாய் பாட்டான் வருதலும் வழக்கினு ளுண்மையான் அமைகவென வினைச்சொற்பற்றி மரபுவழு வமைத்தவாறு.

செயப்படுபொருளை வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தலேயன்றி, எளிதினடப்படுதனோக்கி அரிசிதானேயட்டது எனச் செயப்படு பொருளை வினைமுதலின் றொழிற் படக் கிளத்தலும் வழக்கியன் மரபென்றற்கு `தொழிற்படக் கிளத்தலும்' என்றார். இதனைக் கருமகருத்தனென்ப.

(49)