இறப்பும் எதிர்வுமேயன்றி நிகழ்காலமும் அவற்றொடு மயங்கும்; எ - று. எ - டு : இவள் பண்டு இப்பொழிலகத்து விளையாடும் எனவும், நாளை வரும் எனவும் வரும். சிறப்பத்தோன்று மெனவும் மயங்குதல்வரையா ரெனவும் கூறினார்; இறப்பும் எதிர்வும் மயங்குதல் பயின்று வருதலானும் அத்துணை நிகழ்கால மயக்கம் பயின்று வாராமையானு மென்க. மூன்றுகாலமுந் தம்முண் மயங்குமென்றாரேனும், ஏற்புழியல்லது மயங்காமை கொள்க. ஏற்புழிக் கொள்ளவே1 வந்தானை வருகென்றலும் வருவானை வந்தானென் றலுமென இவை முதலாயினவெல்லாம் வழுவென்பதாம். பிறவுமன்ன. வினையியல் முற்றிற்று (51)
1. இனி, இப்போதுதான் வந்தேன், இப்போதுதான் வாங்கினேன் என்பனவற்றுக்குப் பதிலாக, இப்போதுதான் வந்தது, இப்போதுதான் வாங்கிற்று எனத் தன்மை யொருமை வினைமுற்றுக்கள் படர்க்கையொருமை வினை முற்று வாய்பாட்டால் உலக வழக்கில் வழங்குவதையும் இந் நூற்பாவால் அமைத்துக்கொள்க. |