1.கிளவியாக்கம்

2.பால்

அவை, துணிந்தபின் அமையும் வகை

25தன்மை சுட்டலும் உரித்தென மொழிப
அன்மைக் கிளவி வேறிடத் தான.
 

ஐயுற்றுத் துணியும்வழி அன்மைக்கிளவி அன்மைத் தன்மையைச் சுட்டி நிற்றலு முரித்து என்று சொல்லுவர், துணிந்து தழீஇக் கொள்ளப்பட்ட பொருளின் வேறாய பொருளிடத்து; எ-று.

என்றது, குற்றிகொல்லோ மகன்கொல்லோ என்றானும், ஒருவன் கொல்லோ ஒருத்திகொல்லோ என்றானும், ஒன்று கொல்லோ பல கொல்லோ என்றானும், ஐயம் நிகழ்ந்தவழித் துணிதலுமுண்டு; பிற நடையுள் துணிந்தவழி மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைத்தன்மை யேற்றினும் அமையும் என்றவாறு.

மகனென்று துணிந்தவழிக் குற்றியன்று மகனெனவும், குற்றியென்று துணிந்தவழி மகனல்லன் குற்றியெனவும், ஆண்மகனென்று துணிந்த வழிப் பெண்டாட்டியல்லள் ஆண் மகனெனவும், பெண்டாட்டியென்று துணிந்தவழி ஆண் மகனல்லன் பெண்டாட்டி யெனவும், ஒன்றென்று துணிந்த வழிப் பலவல்ல ஒன்றெனவும், பலவென்று துணிந்த வழி ஒன்றன்று பல எனவும் மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைக் கிளவி அன்மைத் தன்மையைச் சுட்டி நின்றவாறு.

உம்மை எதிர்மறையாகலான், வேறிடத்துச் சுட்டாமையே பெரும்பான்மை யென்பதாம். ஆகவே. இவ் வுருபு குற்றியன்று மகனென ஐயம் புலமாகிய பொதுப்பொருண் மேலானும், குற்றியல்லன் மகனெனத் துணி பொருள் மேலானும் அன்மைக்கிளவி அன்மை சுட்டி நிற்றல் பெரும்பான்மை யென்பதாம்; என்னை? வேறிடத்துச் சுட்டாமையாவது ஈண்டுச் சுட்டலே யாகலான்.

குற்றியன்று மகன் என்றவழி மகனென்பது நின்று வற்றுமெனின்:-

எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப" (சொல்-68)

என்பதனான் எழுவாய் வெளிப்படாது நிற்றலுமுண்மையான், வெளிப்படாது நின்ற இவனென்னும் எழுவாய்க்கும் அது பயனிலையாகலின், நின்று வற்றுதல் யாண்டைய தென்க. அல்லனவற்றிற்கும் ஈது ஒக்கும்.

குற்றியல்லன் என்புழிக் குற்றியென்பது அல்லனென்னுஞ் சொல்லோடியைந்தவாறு என்னை யெனின், இவ் வுருபு குற்றியாம் என்றவழி ஆம் என்பதனோடு குற்றியென்பதூஉம் எழுவாயாய் நின்றே இயைந்தாற் போல, இவன் குற்றியல்லன் என்புழி ஆமென்பதன் எதிர்மறையாகிய அன்மைக் கிளவியோடும் குற்றியென்பது எழுவாயாய் நின்றேயியையுமென்பது. எழுவாயாய் இயைதலி னன்றே யான் நீயல்லன் என்புழி நீயென்பது வேற்றுமைக்கேற்ற செய்கை பெறாது நின்றதென்க.(25)