7.இடையியல்

பொதுவிலக்கணம்

அதன் பாகுபாடு

250அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குற்ப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை.
 

மேற்சொல்லப்பட்ட இடைச்சொற்கள்தாம், இரண்டுசொற் புணருமிடத்து அப்பொருணிலைக் குதவு வனவும் வினைச்சொல்லை முடிக்குமிடத்துக் காலப் பொருளவாய் வருவனவும், செயப்படுபொருண் முதலாகிய வேற்றுமைப் பொருட்கண் உருபென்னுங் குறியவாய் வருவனவும், பொருளுடையவன்றிச் சார்த்திச் சொல்லப்படுந் துணையாய் வருவனவும், வேறுபொருளுணர்த்தாது இசை நிறைத்தலே பொருளாக வருவனவும், தத்தங் குறிப்பாற் பொருளுணர்த்துவனவும், ஒப்புமை தோன்றாத வழி அவ்வொப்புமைப்பொருள் பயப்பனவு மெனக் கூறப்பட்ட ஏழியல்பையுடைய சொல்லுமிடத்து ; எ - று.

புணரியனிலை புணரியலது நிலை. ஆண்டுப் பொருணிலைக் குதவுதலாவது எல்லாவற்றையும் என்புழி வற்றுச் சாரியை நிலைமொழிப்பொருள் அஃறிணைப் பொருளென்பதுபட வருதலும் எல்லா நம்மையும் என்புழி நம்முச்சாரியை அப் பொருள் தன்மைப்பன்மை யென்பது பட வருதலுமாம். அல்லனவும் தாஞ் சார்ந்து வரும் மொழிப் பொருட்கு உபகாரமுடையவாய் வருமா றோர்ந்து கொள்ளப்படும். அல்லாக்கால், சாரியை மொழியாகா வென்பது.

வினைச்சொல் ஒரு சொல்லாயினும் முதனிலையும் இறுதி நிலையும் இடைச் சொல்லுமாகப் பிரித்துச் செய்கை செய்து காட்டப்படுதலின் ` வினைசெயன் மருங்கின் ' என்றார் . அம் முடிபுணர்த்தாமைக்குக் காரணம் ` புணரிய னிலையிடை யுணரத் தோன்றா ' என்புழிச் சொல்லப் பட்டது. அவற்றுள் ஒரு சாரன . பாலுணர்த்தாமையாலும், எல்லாங்கால முணர்த்துதலானும் ` காலமொடு வருநவும்' என்றார்.

வேற்றுமைப் பொருளவாய் வருவன பிறசொல்லுமுள வாகலின் அவற்றை நீக்குதற்கு உருபாகுநவு மென்றார். பிறசொல்லாவன `கண்ணகன் ஞாலம்', `ஊர்க்கானிவந்த பொதும்பர் ' (குறிஞ்சிக்கலி - 20) என ஏழாம் வேற்றுமைப் பொருட்கண் வருங் கண் கால் முதலாயினவும், `அனையை யாகன் மாறே ' (புறம் - 4) ` சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே' `இயல்புளிக் கோலோச்சு மன்னவன்' (குறள் - 545) என மூன்றாம் வேற்றுமைப் பொருட்கண் வரும் மாறுஉளி என்பனவும்,அன்ன பிறவுமாம். அஃதேல், வேற்றுமையுருபு மென்றோதுவார்; ஓதவே, இவை நீங்குமெனின் : - அஃதொக்கும்; அவை தம்மையுந்தழீஉக்கோடற்கு ` வேற்றுமைப் பொருள்வயின் ' என்றார். அவை வருங்கால் நிலைமொழி யுருபிற்கேற்ற செய்கை ஏற்புழிப் பெறுதலுடைமையின் `உருபாகுநவும் ' என்றார் . இஃது இருபொருளுணர்த்தலான் இருதொடராகக் கொள்க.

அசைத்தல் - சார்த்துதல். பொருளுணர்த்தாது யெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசை நிலை யாயிற்று. அவை அந்தில் முதலாயின. ` புகழ்ந்திகு மல்லரோ பெரிதே ' `உரைத்திசினோரே ' எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின், அசைநிலைச் சொல் லாயின வென்பாருமுளர்.

செய்யுட்கண் இசைநிறைத்து நிற்றலின் இசைநிறை யாயின.

குறிப்புச் சொல்லுவான்கண்ணதாயினும் அவன் குறித்த பொருளைத் தாங்குறித்து நிற்றலின், தத்தங்குறிப்பி னென்றார். சொல்லுவான் குறித்த பொருளைத் தாம் விளக்குமெனவே, `கூரியதோர் வாள் ' என மன்னானன்றி ஓசைவேறுபட்டான் ஒருகாற் றிட்பமின்றென்னுந் தொடக்கத்து ஒழியிசைப் பொருடோன்றலும் பெறப்படும். பொருட்கும் பொருளைப் புலனாகவுடைய உணர்விற்கும் ஒற்றுமை கருதிப் பொருளுணர்வைப் பொருளென்றார். `மிகுதி செய்யும் பொருள ' (சொல் - 299) என்பது முதலாயின வற்றிற்கும் ஈதொக்கும்.

ஒக்குமென்னுஞ் சொல்லன்றே ஒப்புமை யுணர்த்துவது; அச்சொல் ஆண்டின்மையான் ஒப்புமை தோன்றாமையான், ஒப்பில் வழியாலென்றார்; உவமையொடு பொருட்கு ஒப்பில்லையென்றாரல்லரென்பது. ஒக்குமென்னுஞ் சொல்லை ஒப்பென்றாரென்பாருமுளர். ஒப்பில் வழியாற் பொருள் செய்குநவான, அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப என்பன முதலாகப் பொருளதிகாரத்துக் கூறப்பட்ட முப்பத்தாறனுள் ஒக்குமென்ப தொழிய ஏனையவாம்.

சாரியையும், வேற்றுமையுருபும், உவம உருபும், குறிப்பாற் பொருளுணர்த்துமாயினும், புணர்ச்சிக்கண் உபகாரப்படுதலும் வேற்றுமைத் தொகைக்கும் உவமத் தொகைக்கும் அவ்வுருபுபற்றி இலக்கணங் கூறுதலும் முதலாகிய பயனோக்கி, இவற்றை வேறு கூறினார்.

இடைச்சொலேழனுள்ளும் முதனின்ற மூன்றும் மேலேயுணர்த்தப்பட்டமையான் முன் வைத்தார். ஒப்பில்வழியாற் பொருள் செய்குந முன்னருணர்த்தப்படுதலின் இறுதிக்கண் வைத்தார்.ஒழிந்த மூன்றும் இவ்வோத்தின்கண் உணர்த்தப் படுதலின் இடை வைத்தார்.

(2)