7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`மன்' என்னும் இடைச்சொல்லின் பொருள்

252கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே.
 

இவ்வோத்தின்கண் ணுணர்த்தப்படும் மூவகை யிடைச்சொல்லுள் தத்தங் குறிப்பாற்பொருள் செய்குந பொருளுணர்த்துதற் நிறப்புப் பரப்புடைமையான் அதனை முன் னுணர்த்துகின்றார்.

கழிவு குறித்து நிற்பதும், ஆக்கங் குறித்து நிற்பதும், ஒழியிசைப் பொருண்மை குறித்து நிற்பதுமென மன்னைச் சொல் மூன்றாம்; எ-று.

எ - டு : `சிறியகட் பெறினேயெமக்கீயு மன்னே' (புறம்- 235)என்புழி மன்னைச்சொல், இனி அது கழிந்ததென்னும் பொருள் குறித்து நின்றது. `பண்டு காடுமனின்று கயல் பிறழும் வயலாயிற்று' என்புழி அஃதாக்கம் குறித்து நின்றது. `கூரியதோர் வாண்மன்' என்புழித் திட்ப மின்றென்றானும இலக்கணமின் றென்றானும் எச்சமாய் ஒழிந்த சொற் பொருண்மை நோக்கி நின்றது

(4)