7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`கொன்' என்னுஞ் சொல்

254அச்சம் பயமிலி காலம் பெருமையென்று
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.
 

அச்சப் பொருளதும், பயமின்மைப் பொருள தும், காலப்பொருளதும், பெருமைப் பொருளதுமெனக் கொன்னைச் சொல் நான்காம்; எ-று.

எ - டு : `கொன்முனை யிரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே' (குறுந்-91)

எனபுழி அஞ்சி வாழுமூர் எனவும்
`கொன்னே கழிந்தன் றிளமை' (நாலடி-55)

என்புழிப் பயமின்றிக் கழிந்தது எனவும்,

`கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ', என்புழிக் காதலர் நீங்கிய காலமறிந்து வந்த வாடை எனவும்,

`கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே' (குறுந்-138) என்புழிப் பேரூர் துஞ்சினும் எனவும், கொன்னைச்சொல்நான்கு பொருளும்பட வந்தவாறு கண்டுகொள்க.

(6)