7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`உம்' என்னுஞ் சொல்

255எச்சஞ் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை யாக்கமென்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே.
 

எச்சங் குறிப்பது முதலாக ஆக்கங் குறிப்ப தீறாக உம்மைச்சொல் எட்டாம்; எ- று.

எ - டு : சாத்தனும் வந்தான் என்னுமும்மை, கொற்றனும் வந்தானென்னும் எச்சங் குறித்து நிற்றலின், எச்ச வும்மை. கொற்றனும் வந்தான் என்பதூஉம், இறந்த சாத்தன் வரவாகிய எச்சங் குறித்து நிற்றலின் , எச்சவும்மை. `குறவரு மருளுங் குன்றத்துப் படினே' (மலை-275) என்பது குன்றத்து மயங்கா தியங்குதற்கண் குறவர் சிறந்தமையாற் சிறப்பும்மை.

`ஒன்று இரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லு முலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்
வல்லாரை வழிபட் டொன்றறிந் தான் போல்
நல்லார்கட் டொன்று மடக்கமு முடையன்
இல்லோர் புன்க ணீகையிற் றணிக்க
வல்லான் போல்வதோர் வண்மையு முடையன்' (கலி-47)

என்புழி இன்னானென்று துணியாமைக்கண் வருதலின் ஐயவும்மை. சாத்தன் வருதற்கு முரியன் என்பது வாரா மைக்குமுரிய னென்னும் எதிர்மறையை ஒழிபாகவுடைத்தாய் நிற்றலின், எதிர்மறையும்மை. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என எஞ்சாப் பொருட்டாகலான் முற்றும்மை. `நிலனு நீருந் தீயும் வளியு மாகாயமு மெனப் பூதமைத்து' என்புழி எண்ணுதற்கண் வருதலின் எண்ணும்மை. இரு நில மடி தோய்தலிற் றிருமகளுமல்லள் அரமகளுமல்லள் இவள் யாராகும் என்றவழித் தெரிதற்பொருட்கண் வருதலிற் றெரிநிலை யும்மை. திருமகளோ அரமகளோ என்னாது அவரை நீக்குதலின் ஐயவும்மையின் வேறாத லறிக. ஆக்கவும்மை வந்த வழிக் கண்டுகொள்க . உரையாசிரியர் நெடினும் வலியனு மாயினான் என்புழி உம்மை ஆக்கங்குறித்து நிற்றலின் ஆக்க வும்மை யென்றார். `செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே' (சொல்-15) என்னுமும்மை. வழுவை யிலக்கண மாக்கிக் கோடல் குறித்து நின்றமையின் ஆக்கவும்மை என்பாரு முளர். பாலும் ஆயிற்று என்றால், அதுவே மருந்து மாயிற்று என வருதலாம். (ஆக்கம்)

(7)