7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`ஓ' என்னுஞ் சொல்

256பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப ஓகா ரம்மே.
 

பிரிநிலைப் பொருட்டாவது முதலாக ஓகாரம் அறுவகைப்படும்.

எ - டு : `யானோ தேறேனவர் பொய்வழங் கலரே' (குறுந்-21) என்பது தேறுவார் பிறரிற் பிரித்தலிற் பிரிநிலை யெச்சமாயிற்று. சாத்தனுண்டானோ என்பது வினாவோ காரம். யானோ கொள்வேன் என்பது கொள்ளேனென்னு மெதிர்மறை குறித்து நிற்றலின், எதிர்மறையோகாரமாம். கொளலோ கொண்டான் என்பது கொண்டுய்யப் போயினானல்ல னென்பது முதலாய ஒழியிசை சோக்கி நிற்றலின் ஒழியிசையோகாரம். திருமகளோ வல்லள் அரமகளோ வல்லள் இவள் யார்? என்ற வழித் தெரிதற்கண் வருதலிற் றெரிநிலையோகாரம். ஓஓபெரியன் என்பது பெருமை மிகுதி யுணர்த்தலிற் சிறப்போகாரம்.

(8)