தேற்றேகார முதலாக ஏகார மைந்து; எ - று. எ - டு : உண்டே மறுமை எனத் தெளிவின்கண் வருதலிற் றேற்றேகாரம். நீயே கொண்டாய் என வினாப்பொருளு ணர்த்தலின் வினாவேகாரம். அவருளிவனே கள்வன் எனப் பிரித்தலிற் பிரிநிலை யேகாரம். நிலனே நீரே தீயே வளியே என எண்ணுதற்கண் வருதலின் எண்ணேகாரம். கடல்போற் றோன்றல காடிறந் தோரே ( அகம் - 1) என்பது செய்யுளிறுதிக் கண் வருதலின் ஈற்றசையேகாரம். ` வாடா வள்ளியங் காடிறந்தோரே ' ( குறுந் - 216) எனச் செய்யுளிடையும் வருதலின் ஈற்றசையென்பது மிகுதி நோக்கிச் சென்றகுறி. இஃதசை நிலையாயினும் ஏகார வேறுபாடாடாகலின் ஈண்டுக்கூறினார். (9) |