7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` என ' என்னுஞ் சொல்

258வினையே குறிப்பே இசையே பண்பே
எண்ணே பெயரோடு அவ்வறு கிளவியும்
கண்ணிய நிலத்தே எனவேன் கிளவி.
 

வினை முதலாகிய ஆறு பொருண்மையுங் குறித்து வரும் என வென்னு மிடைச்சொல் ; எ - று.

எ - டு : ` மலைவான் கொள்கென உயிர்பலி தூஉய் ' ( புறம் - 143) என வினைப் பொருண்மையும், ` துண்ணெனத் துடித்தது மனம் ' எனக்குறிப்புப் பொருண்மையும் ஒல்லென வொலித்தது என இசைப் பொருண்மையும், வெள்ளென விளர்த்தது. எனப் பண்புப் பொருண்மையும் நிலனென நீரெனத் தீயென வளியென என எண்ணுப்பொருண்மையும், ` அழுக்கா றெனவொரு பாவி ' (குறள் - 168) எனப் பெயர்ப் பொருண்மையுங் குறித்து, எனவென்னுஞ் சொல் வந்தவாறு கண்டு கொள்க.

(10)