பண்புச் சொல்லும், சினைச்சொல்லும், முதற்சொல்லும் என மூன்றுங் கூறப்பட்ட முறை மயங்காமல், வழக்கைப் பொருந்தி நடக்கும், வண்ணச் சொல்லோடு தொடர்ந்த சினைச் சொல்லையுடைய முதற்சொல்; எ-று. வடிவு முதலாகிய பிற பண்பும் உளவேனும், வண்ணப் பண்பினது வழக்குப் பயிற்சி நோக்கி `வண்ணச் சினைச் சொல்' என்றார். எ - டு: செங்கால் நாரை, பெருந்தலைச் சாத்தன் என வரும். கால் செந்நாரை, தலைபெருஞ் சாத்தன் என முறை மயங்கி வரின், மரபு வழுவா மென்க. வழக்கினுள் மயங்காது வருமெனவே. கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடி" (புறம்-238) எனச்செய்யுளுள் மயங்கியும் வரப்பெறும் என்றவாறாம். செவி செஞ்சேவல்,வாய்வன் காக்கை என்பன, செஞ்செவிச்சேவல் வல்வாய்க் காக்கை என்னும் பொருள்பட நின்றமையின், வண்ணச் சினைச்சொல் மயக்கமாயின. அஃதேல், சினையடையாகிய செம்மையும் வன்மையும் முதலடை ஆயினவாறு என்னை யெனின்:-சினையொடு முதற்கு ஒற்றுமையுண்மையான் அவை முதலோடும் இயைபுடைய வென்பது. `பெருந்தோள் சிறுநுசுப்பின் பேரமர்க்கண் பேதை' என்புழி மூன்றாம் வழி முதல் கிடவாது பின்னும் அடைவுஞ்சினையும் புணர்த்தமையான் வண்ணச் சினைச்சொல் செய்யுளுள் மயங்கி வந்ததென்று உரையாசிரியர் கூறினாராலெனின்- மூன்றாம் வழிப்புணர்க்கப்படும் பேதையென்னும் முதற்சொல் பேரமர்க்கண் என்னுந் தொகையோடு வேற்றுமைப் பொருள்படத் தொக்கு. அத்தொகை சிறுநுசுப்பு என்னுந் தொகையோடும் அப் பொருள்படத் தொக்கு, ஒரு சொல்லாய், `பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி' என்றாற்போல மூன்றாம்வழிப் பிற சொல்லடுத்துப் பேதை யென்னும் முதல் கிடந்ததெனவே படுதலின், மயக்கமின்மையான், அவர்க்கது கருத்தன்றென்க. அன்றிப் பெருந்தோள் முதலாகிய மூன்றும் பலபெயர் உம்மைத்தொகைபடத் தம்முள் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் பேதையென்பதனோடு வேற்றுமைத் தொகைபடக் தொக்கன வெனினும்,அவை உம்மைத் தொகைபடத் தொகாது நின்று பேதையென்பதனோடு வேற்றுமைத்தொகைபட ஒருங்கு தொக்கனவெனினும், தம்முள் இயையாது பேதை யென்பதனோடு இயைதலின், ஆண்டும் மயக்கமின்மை யறிக. அஃதேல்,இவ்வாறு வருதல் வழக்கிற்கும் உரித்தோ எனின்:- அடுக்கிய அடையும் சினையும் பொதுமை நீக்குதற்கன்றி அணி குறித்து நிற்றலின் செய்யுட்கே உரித்தென்பது. `சிறுபைந்தூவி'(அகம்-57) எனச் சினையொடு குணம் இரண்டடுக்கி வருதல் செய்யுட் குரித்து என்றும் `இளம் பெருங் கூத்தன்' என முதலொடு குணம் இரண்டடுக்கி வருதல் வழக்கிற் குரித்து என்றும், பிறர் மதமேற் கொண்டு கூறினார். ஒன்றாக பலவாக இனஞ்சுட்டாதன செய்யுட்கு உரியவாம், இனஞ்சுட்டி நின்றன வழக்கிற்கு உரியவாம் என்பதே உரையாசிரியர் கருத்தென்க. அன்றிப் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் என்பதனால் சினையொடு குணம் இரண்டடுக்கல் செய்யுளா றென்று கொள்ளினும் அமையும்; முதலொடு குணமிரண் டடுக்கல் வழக்கியல் சினையோ டடுக்கல் செய்யு ளாறே" என்றாராகலின். வண்ணச் சினைச்சொல் என்றதனால் வண்ணமும் சினையும் முதலுங் கூறுதற்கண்ணது இவ்வாரய்ச்சி யென்பதாம். எனவே இளம்பெருங் கூத்தன். பெரும்பலாக்கோடு என்னுந் தொடக்கத்தன வேண்டியவாறு வரப்பெறு மென்றவாறு. மயங்காது வருக என மரபுவழுக் காத்தவாறு. (26) |