7.இடையியல்

சிறப்பிலக்கணம்

` மற்று ' என்னுஞ் சொல்

262மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
அப்பா லிரண்டென மொழிமனார் புலவர்.
 

மற்றென்னுஞ்சொல் வினைமாற்றும் அசை நிலையுமென இரண்டாம் ; எ - று.

எ - டு : ` மற்றறிவா நல்வினையாமிளையம் ' (நாலடி - 9) என்றவழி அறஞ்செய்தல் பின்னறிவாமென அக்காலத்து வினைமாற்றுதலான் மற்றென்பது வினைமாற்றின் கண்வந்தது. ` அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கலுழும்' (குறுந் - 12) என அசைநிலையாய் வந்தது. கட்டுரையிடையும் மற்றோ என அசைநிலையாய் வரும்.

(14)