மற்றைய தெனப் பெயர்க்கு முதனிலையாய் வரும் மற்றையென்னும் ஐகாரவீற் றிடைச்சொல் சுட்டப் பட்டதனை ஒழித்து, அதனினங்குறித்து நிற்கும்; எ - று. ஆடை கொணர்ந்தவழி அவ்வாடை வேண்டாதான் மற்றையது கொணாவென்னும். அஃது அச்சுட்டிய வாடையொழித்து அதற்கினமாகிய பிறவாடை குறித்து நின்றவாறு கண்டுகொள்க. பெரும்பான்மையும் முதனிலையாய் நின்றல்லது அவ்விடைச்சொல் பொருள் விளக்காமையின்,` மற்றையதென்னுங் கிளவி ' என்றார். சிறுபான்மை மற்றையாடை எனத் தானேயும் வரும். மற்றையஃது மற்றையவன் என்னுந் தொடக்கத்தனவும் அவ்விடைச்சொன் முதனிலையாய பெயர். (16) |