ஒருவனையும் ஒருத்தியையுஞ் சொல்லும் பன்மைச் சொல்லும், ஒன்றனைச் சொல்லும் பன்மைச் சொல்லும், வழக்கின்கண் உயர்த்துச் சொல்லுஞ் சொல்லாம்,இலக்கண முறைமையாற் சொல்லும் நெறியல்ல; எ-று. எ - டு: யாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார் என வரும்1. உயர்சொல் - உயர்க்குஞ் சொல். உயர்சொற் கிளவி யென்புழிக் கூறியது கூறலன் மை பண்புத்தொகை யாராய்ச்சிக்கண் சொல்லுதும்2. தாம் வந்தார் தொண்டனார் எனப் பன்மைக்கிளவி இழித்தற்கண்ணும் வந்ததாலெனின்:- ஆண்டு உயர்சொல் தானே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்க. இலக்கண மருங்கின் சொல்லாறல்ல என்றதனான் இலக்கண மன்மையும் வழக்கினாகிய உயர்சொற் கிளவி யென்றதனான் வழுவன்மையுங் கூறினார்; கூறவே, வழுவமைதி யென்றவாறாம். அஃதேல், "வழக்கினாகிய உயர்சொற் கிளவி" யெனவே வழுவமைதி யென்பது பெறுதும்; இலக்கண மருங்கின் சொல்லாறல்ல எனல் வேண்டாவெனின்:- அங்ஙனங் கூறிற் செய்யுள் வரைந்தவாறோ வழுவமைத்தவாறோ என ஐயமாக்கலின், அவ்வாறு கூறல் வேண்டு மென்பது. பன்மைக் கிளவியும் எனப் பொதுவகையால் கூறினா ரேனும், உயர்த்தற்கண் வழங்கப்பட்டு வரும் உயர்திணைப் பன்மையும் விரவுப் பன்மையுமே கொள்ளப்பட்டும் என்றற்கு `வழக்கினாகிய' என்றார். தன்னினம் முடித்தல் என்பதனான் எருத்தையும் ஆவையும், எந்தை வந்தான் , எம்மன்னை வந்தாள் என உயர் திணையாய் உயர்த்து வழங்கலும் ஒன்றென முடித்தல் என்பதனால் `கன்னிஞாழல்' (சிலப் - கானல் வரி - 18) கன்னியெயில் என அஃறிணையாய் நின்று உயர்திணை வாய்பாட்டால் கூறப்படுதலும், பண்புகொள் பெயர்க்கொடை, வழக்கினகத்தும், பெருங்கொற்றன், பெருஞ்சாத்தன் என இல்குணம் அடுத்து உயர் சொல்லாய் வருதலுங் கொள்க. (27)
1. ஒருவர் என்னும் சொல்லும் உயர்சொற் கிளவியே. ஒருவர் தாமாய் ஒன்றை எண்ணும்போதும் ஓர் ஆசிரியரும் ஒரு தலைவனும் ஒன்றைக் கூறும்போதும் `யாம்' என்னும் பன்மைச் சொல் நிகழும்.ஆசிரியர் கூறுவதை ஆங்கிலத்தில் Editorial `we' என்பர். யாங்கள் நீங்கள் அவர்கள் என்னும் இரட்டைப் பன்மைப் பெயர்கள் ஆசிரியர் காலத்தில் வழங்க வில்லை. 2. நகையாடல் பற்றி வந்த `நரியனார்' `தேரையர்' என்பனவும், உயர்வு பற்றி வந்த 'நாலடியார்' `திருக்கோவையார்' என்பனவும், இவை போன்றவும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவிகளாம். |