இயற்பெயர் முன்னர் வரும் ஆரென்னுமிடைச் சொற் பலரறி சொல்லான் முடியும்; எ -று. ஈண்டியற்பெயரன்றது இருதிணைக்கும் அஃறிணை யிருபாற்கு முரிய பெயரை. எ - டு : பெருஞ் சேதனார் வந்தார், முடவனார் வந்தார், முடத்தாமக் கண்ணியார் வந்தார், தந்தையார் வந்தார் எனவும் நரியார் வந்தார் எனவும் வரும். தாம், தான் எல்லாம், நீயிர், நீ என்னும் ஐந்துமொழித்து அல்லாவியற்பெயரெல்லாவற்று முன்னரும் அஃறிணையியற் பெயரல்லாவற்று முன்னரும் ஆரைக்கிளவி வருதலின், பெரும்பான்மை குறித்து `இயற்பெயர் முன்னர் ' என்றார். நம்பியார் வந்தார். நங்கையார் வந்தார் எனச் சிறுபான்மை உயர்திணைப் பெயர் முன்னர் வருதல் ஒன்றென முடித்த லென்பதனாற் கொள்க. ஆரைக்கிளவி கள் ளென்பது போல ஒற்றுமைப்பட்டுப் பெயரீறாய் நிற்றலின், ஆரைக்கிளவி பலரறி சொல்லான் முடியுமென்றது அதனை யீறாகவுடைய பெயர் பலரறி சொல்லான் முடியுமென்றவாறாம். ` பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே ' என ஆரைக் கிளவிய தியல் புணர்த்தவே, அஃது உயர்த்தற் பொருட்டாதலும் திணைவழுவும் பால்வழுவும் அமைத்தலும் பெற்றாம். ஒருமைப் பெயர்முன்னர் ஒருமை சிதையாமல் ஆரைக் கிளவி வந்து பலரறி சொல்லான் முடிதலின், ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவியின் வேறாத லறிக. (22) |