ஏயென்னு மிடைச்சொல்லும் குரையென்னுமிடைச் சொல்லும் இசைநிறையும் அசைநிலையு மென ஓரொன்றிரண்டாம்; எ - று. எ - டு : ` ஏஎ யிஃதொத்த னென்பெறான் கேட்டைக் காண் ' ( கலி - 61) என்பது இசைநிறை. `ஏஎயென் சொல்லுக ' என்பது அசை நிலை. அளிதோ தானேயது பெனலருங் குரைத்தே' ( புறம் - 5) என்பது இசைநிறை. `பல்குரைத்துன்பங்கள் சென்று படும் ' (குறள் - 1045) என்பது அசைநிலை. தொடர்மொழி முதற்கட் பிரிந்து நின்றல்லது. பெரும் பான்மையும் ஏகாரம் இசைநிறையும் அசைநிலையுமாகாமையின், சார்ந்த மொழியோடு ஒன்று பட்டிசைத்து இடையும் இறுதியும் நிற்குந் தேற்றேகார முதலாயின வற்றோடு ஒருங்கு கூறாது வேறு கூறினார். அஃதேல், இதனை நிரனிறைப் பொருட்டாகக் கொண்டு ஏ இசை நிறை; குரை அசைநிலை யென்றாரால் உரையாசிரியரெனின் : - அற்றன்று; மற்று அந்தில் என்பன போலப் பொருள் வகையான் வேறுபடுவனவற்றை இரண்டா மென்றதல்லது சொல்வகையான் இரண்டாகிய சொல்லை இரண்டா மென்றதனான் ஒரு பயனின்மையின், அவர்க் கது கருத்தன் றென்க. அல்லதூஉம், ஒரு சொல்லே இசைநிறையும் அசைநிலையுமாக லுடைமையான் , அவற்றை யுடன்கூறினா ரென்னாக்கால் இசை நிறையும் அசை நிலையும் ஒருங்கு மயங்கக் கூறவா மாகலானும், அவர்க்கது கருத்தன்மை யுணர்க. (24) |