செலவு முதலாகிய நான்கு தொழிற்கண்ணும் நிலைபெறப் புலப்படாநின்ற அந்நான்கு சொல்லும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூவிடத்திற்கு முரியவாய் வரும்; எ-று. செலவு முதலாகிய தொழிற்கண் சிறப்பு வகையான் நிலைபெறாது பொதுவாய் வரும் இயங்குதல் ஈதல் என்னுந் தொடக்கத்தனவற்றின் நீக்குதற்கு `நிலைபெறத் தோன்றும்' என்றார். முற்றும் எச்சமும் - தொழிற்பெயருமாகி அத் தொழில் பற்றி வரும் வாய்பாடு பலவாயினும். அவையெல்லாம் இந்நான்கு தொழிலும் பற்றித் தோன்றுதலின் . `நான்கு சொல்' என்றார். பொருள் வகையான் முன்னறியப்பட்டமையான் `அந்நாற் சொல்லும்' என்றார். இச் சூத்திரத்துள் ஈங்கு முதலாயின தன்மைக்கண்ணும், ஆங்கு முதலாயின படர்க்கைக்கண்ணும் அடக்கப்பட்டன.3 வினைச்சொல் மூன்றிடத்திற்கும் உரியவாதல் வினை யியலுள் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல்வேண்டா எனின்: - ஆண்டுப் பாலுணர்த்தும் ஈற்றான் இடத்திற்குரிமை கூறினார், ஈண்டு ஈற்றானன்றிச் செலவு முதலாயின முதனிலை தாமே இடங்குறித்து நிற்றலுடைமையான், இவ்வேறுபாடு ஆண்டுப் பெறப்படாமையின் ஈண்டுக் கூறினா ரென்பது. அஃதேல் , தருசொல் வருசொல் ஆயிரு கிளவியுந் தன்மை முன்னிலை யாயீரிடத்த, படர்க்கையிடத்த கொடைச் சொல்லுஞ் செலவுச் சொல்லும் என ஓதுக. இச் சூத்திரம் வேண்டா வெனின்:- அங்ஙனமோதின், இடஞ்சுட்டும் முதனிலை இந்நான்குமே யென்னும் வரையறை பெறப்படாமையின், இது வேண்டுமென்பது. அஃதேல், போதல் புகுதல் என்னுந் தொடக்கத்தனவும் இடஞ்சுட்டுதலின்:- அவை இக்காலத்துச் சிலவிடத்துப் பயின்று வருமாயினும் மூன்றிடத்திற்கும் பொதுவாகலினன்றே, ஆசிரியர் இந்நாற் சொல்லுமென இவற்றையே வரைந்தோதுவா ராயிற்றென்பது. (28)
1. 28,29,30 ஆகிய மூன்று நூற்பாக்களையும் தெய்வச் சிலையார் ஒன்றாகக் கொண்டு பொருள் கூறுவர். 2. இயங்குதல், செலவு வரவுகட்கும், ஈதல் தரவு கொடை கட்கும் பொதுவாம். 3. ஈங்கு வந்தான் என்பது என்னிடம் வந்தான் என்றும் ஆங்குச் சென்றான் என்பது அவனிடம் சென்றான் என்றும், சில சமயத்திற் பொருள் தருதலால், ஈங்கு முதலாயின தன்மைக் கண்ணும் ஆங்கு முதலாயின படர்க்கைக் கண்ணும் அடக்கப்பட்டன. |