7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`ஏ' என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு

286ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி
கூற்றுவயின் ஓரளபு ஆகலும் உரித்தே.
 

செய்யு ளிறுதிக்கண் நின்றிசைக்கும் ஈற்றசை யேகாரங் கூற்றிடத்து ஒருமாத்திரைத் தாகலு முரித்து ; எ - று.

எ - டு : `கடல்போற் றேன்றல காடிறந் தோரே' (அகம் - க ) என்புழி ஓரளபாயினவாறு கண்டுகொள்க.

தேற்றமுதலாயின நீங்கி ஈற்றசையே தழுவுவதற்கு ஈற்று நின்றிசைக்கு மென்றார் . செய்யுளிடை நிற்பதனை நீக்குதற்கு ஈற்று நின்றிசைக்கும் மென்றே யொழியாது இறுதி யென்றார். மேனின்ற செய்யுளுறுப்போடு பொருந்தக் கூறுதற்க ணென்பார். கூற்றுவயி னென்றார்.

உம்மை ; எதிர்மறை.

(38)